நான் சிறுவனாக இருந்த போது 'ஷோலே' என்ற ஹிந்தி படம் வந்தது. என் நண்பர்கள் எல்லோரும் இந்த படத்தை பார்க்க சென்றார்கள். 'சரி, ஹிந்தி படத்தை பார்த்து நமக்கு என்ன புரிய போகிறது' என்று நானும் பேசாமல் இருந்து விட்டேன்.
அவ்வளவுதான். அதற்கு பிறகு நான்கு நண்பர்கள் கூடினால் "நீ ஷோலே படம் பாத்தியா" என்று கேட்டால் நான் அப்பாவியாக "இல்லை" என்று கூறுவேன். ஒரு பெரிய கொலை குற்றம் செய்தவன் போல "அடப்பாவி, நீ இன்னும் ஷோலே படம் பாக்கலயா?" என்று பாய்ந்து கொண்டு வருவார்கள்.
இதே போல தான் அண்மையில் ஹாரி பாட்டர் புத்தகமும். சத்தியமாக யார் இந்த ஹாரி பாட்டர் என்று எனக்கு ஒரு வாரம் வரையில் தெரியாது. 'இது ஏதோ ஒரு புத்தகம், அதை படிப்பதற்கு ஒரு ஊதாரி கும்பல் அலைகிறது' என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது ஹாரி பாட்டர் புத்தகத்தை படிக்காவிட்டால் இந்த உலகத்தில் நாம் பிறந்ததற்கு அர்த்தமே இல்லை என்று!!
எவனை பார்த்தாலும் "ஹாரி பாட்டர் படம் பாத்தியா, ஹாரி பாட்டர் புத்தகம் படிச்சியா?" என்று தான் கேட்கிறான். தெரியாமல் "இல்லை" என்று சொல்லி விட்டால் அவ்வளவுதான். தீர்ந்தீர்கள்! "அடப்பாவி, இன்னுமா நீ பாக்கல?" என்று நான் அந்நிய கிரகத்திலிருந்து வந்தவன் போல பேசுகிறார்கள்.
இனிமேல் இவர்களிடமிருந்து தப்பிக்க "ஆமாம், புத்தகத்தை படித்து விட்டேன்" என்று பொய் சொல்லலாம் என்று கூட தோன்றுகிறது. ஆனால் உடனே அடுத்த கேள்வியாக பார்த்திபன் வடிவேலுவிடம் கேட்பது மாதிரி எடக்கு மடக்காக கேள்வி கேட்டு விட்டால் என்ன செய்வது என்று தான் புரியவில்லை! வாழவும் விட மாட்டேன் என்கிறார்கள், சாகவும் விட மாட்டேன் என்கிறார்கள் அல்லவா?
இந்த புத்தகத்தை வாங்குவதற்காக மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அலைகிறார்களாம்! எத்தனையோ மில்லியன் பிரதிகள் விற்று தீர்த்து விட்டனவாம். சரி, அதற்கு நான் என்ன செய்ய? ஏன் என் உயிரை வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
கடைசியில் இந்த தொல்லை தாங்காமல் ஒரு புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளேன். யாராவது என்னிடம் வந்து "ஹாரி பாட்டர் புத்தகம் படித்தாயா?" என்று கேட்டால் நான் திரும்பி அவர்களிடம் "நீ T.Rajenderன் வீராசாமி படம் பாத்தியா?" என்று கேட்டு விடுகிறேன். அப்புறம் ஏன் பேசுகிறார்கள்?!!