Wednesday, 9 January 2008

மீசையின் மேல் ஆசை

ஊர் முழுவதும் ஒரு செய்தியை பத்து பைசா செலவில்லாமல் பிரசாரம் செய்ய வேண்டுமா? அல்லது அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தம் முதல் அரசியல்வாதிகளின் அந்தரங்க கிசுகிசுக்கள் வரை இலவசமாக 30 நிமிடங்களில் கேட்க வேண்டுமா?

இதெல்லாம் எங்கே என்று கேட்கிறீர்களா? என்னுடைய ஆஸ்தான முடி வெட்டுபவரின் கடையில் தான் நண்பர்களே!

எனது முடி திருத்துபவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, அரபி என்று சகட்டு மேனிக்கு எல்லா மொழிகளிலும் வெளுத்து வாங்குவார். எனக்கு பல முறை ஆச்சரியமாக இருக்கும். கை வேலை செய்து கொண்டிருக்கும். வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும். மூளை வேறு ஏதோ சிந்தனையில் இருக்கும். எப்படி எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் இந்த சகலகலா வல்லவருக்கு செய்ய முடிகிறது?
ஒரு முறை அவரிடம் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டு விட்டேன். "சார், உங்க மீசைல நரச்ச முடி வந்திருக்கே" என்று ஆரம்பித்தார். 'கடவுளே, உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செய்தியை கூறிவிட்டாரே, அடுத்து என்ன ஆகுமோ' என்று பயந்து 'சரி, அதுக்கு நீங்களே ஏதாவது செய்யுங்க" என்று தெரியாத்தனமாக கூறிவிட்டேன்.

அதற்கு பிறகு ஒரு முக்கால் மணி நேரத்துக்கு நாய்குடையின் மகிமை பற்றியும் மலேஷியாவிலிருந்து தயாராகும் ஒரு நாய்குடை பேஸ்ட் பற்றியும் அதிவேக இரயில் வண்டி (!) மாதிரி பேசிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நான் சிறிது கண் அயர்ந்து விட்டேன்.
திடீரென்று சில்லென்று முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தவுடன் அதிர்ச்சியில் எழுந்து பார்த்தால் மீசை ஒரு பக்கம் அதிகமாக மழிக்கப்பட்டிருந்தது.

போச்சுடா! சாலையில் நடந்து போகும்போது நாய் துரத்தாமல் இருந்தால் சரி. (சீ! நாய்குடை பற்றி இவர் இத்தனை நேரம் என்னை போட்டு தள்ளியதில் நாயை பற்றியே நினைவு வருகிறது!) இப்போது என்ன செய்வது?
"நாயரே, என்ன இப்படி பண்ணிட்டீங்க?" என்று அழாத குறையாக நான் சொல்ல அவர் ஒரு கை தேர்ந்த 'அறுவை சிகிச்சை' நிபுணர் போல " ஒன்னும் ப்ரஷ்ன இல்ல சாரே" என்று மற்றொரு பக்கத்து மீசையை மழிக்க ஆரம்பித்தார்!

எனக்கு என்னவோ இரண்டு பூனைகளுக்கு நடுவில் அப்பத்துக்காக குரங்கு வந்து பஞ்சாயத்து செய்த கதை தேவை இல்லாமல் ஞாபகம் வந்தது.

இப்போது பார்த்தால் முன்பை விட கோரமாக இருந்தது. ஹிட்லரின் மீசையை பார்த்திருப்பீர்கள் அல்லவா? அது போல இரண்டு பக்கமமும் மழித்திருந்தார்! எனக்கு கோபம் வந்து விட்டது. "யோவ் நாயரே! என்னய்யா செஞ்சுட்ட நீ" என்று கத்த நினைப்பதற்குள் நாயர் கையை பார்த்தேன். பளபளவென்று ஒரு கத்தியை என் கழுத்தருகே கொன்டு வந்தார். சடக்கென்று ஒரு பக்க கிருதாவை மழிக்க ஆரம்பித்தார். அப்பாடா, நான் என்னவோ ஏதோ என்று நினைத்து விட்டேன்!

நான் இப்படியே வெளியே சென்றால் என்னை தீவிரவாதி என்று நினைத்து உள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயத்தில் நாயரிடம் நான் ஆசையாக வளர்த்த என் மீசையை முழுவதும் எடுத்து விடும்படி கூறினேன். ஹூம், என்ன செய்வது! நம் கையில் என்ன இருக்கிறது? (எல்லாம் முடி திருத்துபவர் கையில் அல்லவா இருக்கிறது?)
எனது பொக்கிஷம் என் கண் முன்னே எடுக்கப்படுவதை பார்த்து கண்ணீர் வடித்தேன். கடவுளே! என்னை மீசை இல்லாத இந்த கோலத்தில் பிறர் பார்த்தால் என்ன சொல்லுவார்களோ!! 'நாயரே, இருய்யா உனக்கு வெச்சிருக்கேன்' என்று கருவிக்கொண்டே கடையை விட்டு வெளியே வந்தேன். சுவரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. முறுக்கிய மீசையுடன் சிவாஜியின் படம் இருந்தது. அடப்பாவிகளா! எல்லாரும் சேர்ந்து சதி செய்கிறீர்களா?

எங்கள் காலனிக்குள் நுழையும்போது முதன்முதலில் என்னை பார்த்தது கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வாண்டு. 'குபுக்' என்று சிரித்து விட்டான்!

'டேய், டேய், உனக்கும் இப்போது தான் மீசை அறும்ப ஆரம்பித்திருக்கிறது' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன். 'போச்சு, இப்போது இந்த ஏரியாவின் Hot Topic இதுவாகத்தான் இருக்க போகிறது' என்று வெறுப்பின் உச்சகட்டத்துக்கே சென்று விட்டேன்.

அப்போது திடீரென்று அந்த பையன், "Cool" என்றான். இதன் அர்த்தம் புரிய சிறிது நேரம் ஆயிற்று. அதற்குள் மற்ற பையன்கள் என்னை சூழ்ந்து கொண்டு "அங்கிள், மீசை இல்லாமல் நன்றாக இருக்கிறீர்கள்" என்றான். அப்போது தான் எனக்கு உறைத்தது. ஓஹோ, இப்போது மீசை இல்லாமல் இருப்பது தான் fashion போல!
வீட்டுக்குள் நுழைந்தவுடன் எல்லோர் முகத்திலும் முதலில் அதிர்ச்சி. பிறகு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹூம், எல்லாம் என் நேரம் தான். மறு நாள் அலுவலகத்திலும் இதே போல நடந்தது. ஆனால் ஒரிரு நாட்களுக்குள் எல்லோருக்கும் எனது 'புதிய முகம்' பழகி விட்டது. இப்போதெல்லாம் நான் தினமும் தாடி மீசை இரண்டையும் சுத்தமாக மழித்து விடுகிறேன். ஒன்றும் பெரிய வித்யாசம் தெரியவில்லை.

அதனால் நண்பர்களே, மீசையின் மேல் ஆசை வைக்காதீர்கள்! பிறக்கும் போது நாம் மீசையுடன் பிறந்தோமா என்ன?