Tuesday 19 August 2008

சலாம் பம்பாய் - 1

தேதி கூட நன்றாக நினைவிருக்கிறது. ஆகஸ்டு 1, 1988. முதன் முதலில் பம்பாயில் வேலைக்கு சேர்வதற்காக சென்னையிலிருந்து தாதர் எக்ஸ்பிரஸில் கிளம்பிய தினம்.கல்லூரி முடிந்த பின் கிடைத்த முதல் வேலை, அதுவும் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் கிடைத்த வேலை அது. ஆகஸ்டு மூன்றாம் தேதி வேலையில் சேர வேண்டும்.

வேலைக்கான உத்தரவு கையில் கிடைத்துவிட்டதே தவிர பம்பாயில் எங்கே தங்க போகிறேன் என்று ஒன்றுமே தெரியாது. "அங்கே போனால் உனக்கே தெரியும்" என்று எனது தந்தை என்னை சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வழி அனுப்பி வைத்து விட்டார்.

"ஏதாவது பிரச்னை இருந்தால் இந்த எண்ணுக்கு போன் செய்து உதவி கேள்" என்று ஒரு காகிதத்தில் எழுதி என்னிடம் கொடுத்து விட்டு தண்ணீர் தெளித்து விட்டார் எனது தந்தை. அவரும் என்ன செய்வார் பாவம், பணியிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். வயது வேறு ஆகிவிட்டது. பையனை எப்படியாவது வேலையில் சேர்த்து விட்டால் ஒரு பாரம் நீங்கும் என்று நினைத்திருந்தார்.

எப்பொழுதோ அவரின் கீழ் வேலை செய்த குமாஸ்தா (ஸ்ரீனிவாசன் என்று பெயர்) இப்பொழுது பம்பாயில் இருப்பதாக கேள்விப்பட்டு அவருடைய தொலைபேசி எண்ணை எழுதி கொடுத்து விட்டார். நானும் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அந்த எண்ணை சட்டை பையில் வைத்துக்கொண்டு கண்களில் கனவுகளையும் கைகளில் சூட்கேசையும் சுமந்து கொண்டு எனது திக்விஜயத்தை தொடங்கினேன். எனது அம்மா தான் பாவம். பையன் தனியாக என்ன செய்வானோ என்று புலம்பியபடியே கண்ணீருடன் என்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வழியனுப்பினார்.

இரயில் சென்னையை விட்டு கிளம்பும்போது எனக்கே அழுகை வந்து விட்டது. 'முதன்முதலாக வீட்டை விட்டு பிழைப்புக்காக வெளியே செல்கிறோம். அதுவும் யாரையும் தெரியாது. என்ன செய்ய போகிறோமோ கடவுளே' என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்.

நாம் குழந்தைகளாகவே நிரந்தரமாக இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? நம்முடைய தேவைகளை எல்லாம் பார்த்துக்கொள்ள நமது தாய் தந்தை இருக்கும் போது கவலையே இல்லாமல் அவிழ்த்து விட்ட கன்று போல நாம் சுற்றி திரிந்து கொண்டே இருந்திருக்கலாமே? இப்படி திடீரென்று பள்ளி, கல்லூரி, பட்டப்படிப்பு என்று காலம் படு வேகமாக சுழன்று சென்று நம்மையும் ஒரு பெரியவனாக ஆக்கி விட்டதே. இனிமேல் நாமும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதா?

இரயில் அரக்கோணம் தாண்டும் வரை கடந்த கால நினைவுகளிலேயே நான் மூழ்கி விட்டேன். பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தது, நண்பர்களுடன் கவலையே இல்லாமல் சுற்றியது, பட்டப்படிப்பை முடித்தவுடன் திடீரென்று வேலை தேடும் படலத்தில் இறங்கியது, என்று கடந்து வந்த பாதை கண்களுக்கு முன் ஒவ்வொன்றாக தோன்றி மறைந்தது.

இரயிலிலேயே சக பிரயாணிகளுடன் பழக்கம் ஏற்பட்டதால் பம்பாயில் மாதுங்கா என்ற இடத்தில் நிறைய தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்றும், அங்கு South Indian Concerns என்ற இடத்தில் தங்குவதற்கு இடம் கிடைக்கும் என்றும், தாதருக்கு பக்கத்தில் தான் அந்த இடம் என்பதையும் அறிந்து கொண்டேன். அப்பாடா, கடைசியில் எங்கு தங்குவது என்ற பிரச்னை முடிந்ததே!

பம்பாய் தாதரில் நான் வந்து இறங்கிய போது நல்ல மழை. ஆட்டோவுக்காக அங்கும் இங்கும் தேடினால் ஒரு ஆட்டோ கூட தென்படவில்லை. பிறகு தான் பம்பாய் மாநகரில் ஆட்டோவே கிடையாது, டாக்ஸி தான் ஓடும் என்று தெரிந்து கொண்டேன். புறநகரில் மட்டும் தான் ஆட்டோக்கள் ஓடுமாம். அது ஏன் என்று இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த உடனே மனதில் ஒரு பக்கம் உற்சாகம், ஒரு பக்கம் பயம் என்று இருந்தது. எத்தனையோ தமிழ் சினிமாக்களில் கிராமத்திலிருந்து சென்னைக்கு முதன் முதலில் மஞ்சள் பையை தூக்கி கொண்டு வரும் பட்டிக்காட்டு ஆசாமிகள் LIC கட்டிடத்தை அண்ணாந்து பார்ப்பது போல காண்பித்து இருப்பார்கள். அப்போது அந்த காட்சிகளை எல்லாம் ரசித்து சிரித்த எனக்கு, கிட்டத்தட்ட அதே நிலைமையில் நானும் இருப்பது போன்று ஒரு நினைவு வந்தது!

ஒரு அம்பாஸிடர் டாக்ஸியில் சர்தார்ஜி ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். டாக்ஸியில் சாமானை ஏற்றிவிட்டு மாதுங்காவுக்கு செல்லுமாறு கூறினேன். அவர் ஐந்தே நிமிடங்களில் Concerns வாசலில் கொண்டு வந்து இறக்கி விட்டார். மீட்டரை பார்த்தால் ஒரு ரூபாய் என்று காண்பித்தது. 'அட, பரவாயில்லையே, ஒரு ரூபாய்க்கு இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்கிறானே' என்று மனதுக்குள் சந்தோஷத்துடன் பம்பாயில் எனது முதல் செலவான ஒரு ரூபாயை அந்த சர்தார்ஜியிடம் கொடுத்தேன். சர்தார்ஜி என்னை ஏற இறங்க பார்த்து விட்டு ஒரு வித ஏளன சிரிப்புடன் பதினொறு ரூபாய் கேட்டான். 'அட கடங்காரா! மீட்டர் ஒரு ரூபாய் தானே காட்டுகிறது. நான் எதற்கு உனக்கு 11 ரூபாய் கொடுக்க வேண்டும்? என்னை என்ன இளிச்சவாயன் என்று நினைத்தாயா' என்று எனக்கு தெரிந்த அரைகுரை ஹிந்தியில் சர்தார்ஜியை திட்டினேன். 'ஒற்றன்' என்ற படத்தில் வடிவேலு தனது ஊருக்கு STD போன் செய்து விட்டு கடைக்காரரிடம் ஒரு ரூபாயை கொடுப்பாரே, அதே மாதிரி தான்!

சர்தார்ஜி முகத்திலிருந்து புன்னகை மறைந்து இப்போது கோபமாக என்னை திட்ட ஆரம்பித்தான். அதற்குள் கூட்டம் கூடி விட்டது. அங்கு தமிழ் பேசுபவர் ஒருவர் உடனே "சார், இந்த ஊரில் டாக்ஸியில் குறைந்த பட்சமே 11 ரூபாய் தான். நம்ம ஊர் மாதிரி மீட்டரை எல்லாம் திருத்த மாட்டார்கள். டிரைவரிடம் ஒரு அட்டை இருக்கும். அதில் மீட்டர் காண்பிக்கும் கட்டணத்துக்கு எதிரில் நாம் அவருக்கு கொடுக்க வேண்டிய பணம் குறிப்பிடப்பட்டிருக்கும்" என்று விளக்கினார். "அடப்பாவிகளா! இப்படி எல்லாம் வேறு இருக்கிறதா! 'ஒன்று என்றால் பத்து என்று மிகைப்படுத்தி கூறுகிறான்' என்று என்னுடைய அம்மா என்னை பற்றி கூறுவார். இவன் ஒன்று என்றால் பதினொன்று என்று அல்லவா கூறுகிறான்!" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே வேண்டா வெறுப்பாக சர்தார்ஜியிடம் 11 ரூபாயை கொடுத்தேன். அவன் ஏதோ புரியாத பாஷையில் என்னை திட்டிக்கொண்டே வண்டியை கிளப்பினான்.

நான் சூட்கேஸுடன் மாடிப்படியில் ஏறி அங்கு கல்லாவில் உட்கார்ந்திருப்பவரிடம் சென்று "நான் சென்னையில் இருந்து வருகிறேன். எனக்கு இங்கு வேலை கிடைத்திருக்கிறது. தங்குவதற்கு இடம் வேண்டும்" என்றேன். அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "இடமெல்லாம் இல்லை" என்றாரே பார்க்கலாம். எனக்கு பயங்கர அதிர்ச்சி. அடக்கடவுளே! இடம் இல்லையாமே! இப்போது என்ன செய்வது? எங்கே தங்குவது? இவ்வளவு பெரிய ஊரில் யாரையுமே தெரியாதே! நாளைக்கு வேலையில் வேறு சேர வேண்டுமே! என்ன செய்வது?
(தொடரும்)

8 comments:

Anonymous said...

சரியான நேரத்தில் "தொடரும்" போட்டுட்டீங்களே! சீக்கிரம், அடுத்த பதிவை போடுங்க!

Anonymous said...

உண்மையிலேயே நீங்கள் தைரியசாலிதான். தங்க இடமில்லாமல் என்ன செய்தீர்கள்?

Expatguru said...

வருகைக்கு நன்றி, அனானி. சீக்கிரமே அடுத்த பதிவு வரும்.

Expatguru said...

அனானி,

ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் கிளம்பி விட்டேன். பிறகு என்ன ஆயிற்று என்பதை அறிய சிறிது பொருங்களேன்! அடுத்த பதிவு விரைவில் வருகிறது.

யாத்ரீகன் said...

தகவல் தொடர்பு இத்தனை இருக்கும் காலத்தில் இது பெரிய விஷயமில்லை.. ஆனால் நீங்கள் சொல்லும் நேரத்தில் மிகப்பெரும் அனுபவமாகத்தான் இருந்திருக்கும் ..

jeevagv said...

சுவையாக எழுதி இருக்கிறீர்கள், தொடரவும்.
எனக்கும் முதல் பணியிடம் மும்பையாதலால், இன்னமும் கூடுதலாக உங்கள் கதை சுவைக்கிறது!
வாழ்த்துக்கள்!

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, ஜீவா.

Expatguru said...

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான், யாத்ரீகன் அவர்களே. சென்னைக்கு ஒரு போன் செய்ய நிமிடத்துக்கு 35 ரூபாய் ஆன காலம் அது. அதுவும் தபால் அலுவலகத்திற்கு சென்று க்யூவில் நின்று அங்குள்ள PCOவிலிருந்து பேச வேண்டும். வரும் பதிவுகளில் இதை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன். 90களில் தான் மஞ்சள் நிற பலகையுடன் தெருவுக்கு தெரு STD-ISD-PCO கடைகள் வர தொடங்கின. நினைத்தாலே இப்போது கூட வியப்பாக இருக்கிறது இல்லையா?