Friday 26 September 2008

அற்புதமான எலியட்ஸ் கடற்கரை

யானையையும் கடலையும் எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கலாம் என்று கூறுவார்கள். சென்னை எலியட்ஸ் கடற்கரையை அதில் சேர்த்து கொள்ளலாம். அதன் நினைவுகள் என் நெஞ்சில் இருந்து நீங்காதவை.


1970களில் சென்னை பெசண்ட் நகர் என்பது ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடமாக இருந்தது. ஊர் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருந்தாலும் இந்த இடத்தில் மட்டும் தண்ணீர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த நாட்களில் பெசண்ட் நகருக்கு அவ்வளவு பஸ் போக்குவரத்து கூட கிடையாது. இப்போது இருக்கும் பஸ் நிலையம் ஒரு காலத்தில் சுடுகாடாக இருந்தது என்றால் நம்ப முடியுமா?




எலியட்ஸ் கடற்கரையில் அப்போதெல்லாம் கூட்டமே இருக்காது. ஸ்மிட்ஸ் மெமோரியல் என்ற ஒரு கட்டிடம் தான் ஒரு வெள்ளைக்காரரின் நினைவாக இன்றும் இருக்கிறது. நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது அந்த கட்டிடத்தை சுற்றி வந்து விளையாடுவோம். சூரிய கிரகணம் வரும்போதெல்லாம் நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் அந்த கடற்கரையில் குளித்திருக்கிறோம். கடல் குளியலே ஒரு தனி அனுபவம் தான்.
அதற்குப்பின் மஹாலக்ஷ்மி கோவில் மற்றும் மாதா கோவில் கட்டப்பட்டன. இதற்கு பிறகுதான் பெசண்ட் நகர் மிகவும் பிரபலமாக ஆரம்பித்தது.



எலியட்ஸ் கடற்கரையில் மெரினா கடற்கரை போல கசகசவென்று கூட்டம் இருக்காது. எப்போதாவது வரும் சுண்டல் முறுக்கு விற்கும் பையன் என்று மிக அமைதியாக இருக்கும் (இப்போது அப்படி கூற முடியாது).




கடலின் விளிம்பில் நின்று கொண்டு அலைகளை ரசிப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை என்றே கூறலாம். ஒவ்வொறு அலை வந்து கால்களை உரசிவிட்டு செல்லும்போது தரையில் ஒரு சிறு குழிகள் விழும். கால்களை நாம் நகர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் குழிகள் பெரிதாகி கொண்டே போகும். அலைகளின் வேகத்துக்கு நம்மால் நிற்பது கடினமாக போய் விடும். அப்படி உரசும் அலைகளுக்கு நடுவே கிளிஞ்சல்கள், சிறிய கற்கள், நத்தைகள், சிறு பூச்சிகள், என்று ஏராளமான பொருட்கள் வந்து விழும்.




கடற்கரையை நோக்கி நிற்கும்போது நமது அகங்காரம் தவிடுபொடி ஆகிவிடுவதை உணர முடியும். அத்தனை பெரிய கடலின் முன்னால் நாம் நிற்கும்போது நமது அந்தஸ்து, படிப்பு, பகட்டு எல்லாம் தூசி போன்று கடல் காற்றுடன் பறந்து போய் நம்மை சாதாரண மனிதனாய் மாற்றி விடும். இந்த ஆற்றல் சமுத்திரத்தை விட வேறு யாருக்கு உண்டு? அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்த சில்லென்ற காற்றை சுவாசிக்கும்போதும், கடற்கரை அலைகள் நம் கால்களை தொடும்போது மனதில் குடியேறும் அமைதியும் சுகமும் அலாதியான ஒன்று.

கடல் அலைகளும் நமது மனதை போல் தானோ? சாந்தம், சீற்றம், எழுச்சி, அமைதி என்று எல்லவிதமான பரிமாணங்களையும் நாம் அதில் காணலாம் அல்லவா?

இந்த கடலில் எத்தனை எத்தனை ஜீவராசிகள் உள்ளன என்று எண்ணும்போது மிக பிரமிப்பாக இருக்கும். தூரத்தில் போகும் மீனவர்களின் படகுகள் அலைகளுடன் சேர்ந்து ஆடி ஆடி அசைவதை பார்ப்பதிலே ஒரு அலாதி இன்பம் கிடைக்கும். மனது பாரமாக இருக்கும்போது இந்த கடற்கரைக்கு வந்து சிறிது நேரம் அந்த உப்பு காற்றை சுவாசித்தால் லேசாகி ஒரு தெளிவு பிறக்கும்.

தொலைக்காட்சி பெட்டியிலே மெகா சீரியல்களிலும் திரைப்படங்களிலும் ஐக்கியமாகிவிட்டவர்களுக்கு இந்த கடலின் அருமை தெரியாமல் போனது ஒரு துர்பாக்கியமே. இந்த கடற்கரையின் மணலிலே கோபுரம் போல வீடு கட்டி அதில் மகிழ்ந்த நாட்களை எப்படி மறக்க முடியும்?

திடீரென்று எனது தந்தை காலமான பின் அவரது அஸ்தியை இதே எலியட்ஸ் கடற்கரையில் கரைத்தோம். இத்தனை இன்பங்களை கொடுத்த இந்த கடல் அன்னை கடைசியில் இதை கூட எடுத்து கொண்டாளே! பிறந்ததும் தண்ணீரிலே, பிரிவதும் தண்ணீரிலே என்பது இது தானோ? வாழ்க்கை என்பதே இது தானோ?

காலங்கள் பல மாறினாலும் பருவங்கள் பல ஓடினாலும் இந்த கடற்கரையை என்றும் என்னால் மறக்க முடியாது.

6 comments:

Anonymous said...

சின்ன வயதின் பல சம்பவங்களை எனக்குள் நினைவுபடுத்தியது இந்த நல்ல பதிவு.

பாபு said...

உண்மையில் கடல் பற்றி நான் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் இது போல உணர்வுகளை சரியான வார்த்தைகளில் வெளியிட தெரியாது.மிக சரியாக சொல்லிய்ருக்கிறீர்கள்.
கடலை பார்த்தவுடன் ஒருவன் குழந்தையாகவோ அல்லது ஞானியாகவோ ஆகிவிடுவான், சரிதானே?

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பாபு. ஒரு விதத்தில் குழந்தையும் ஞானியும் ஒன்று தான் என்றே நினைக்கிறேன். இருவரும் பொய் பேச மாட்டார்கள், இருவருக்கும் 'தான்' என்ற அகந்தை கிடையாது, இருவருக்கும் பேராசை கிடையாது, இல்லையா?

Anonymous said...

கடலால் விளையும் இன்ப உணர்வை நன்கு விளக்கி எழுதி உள்ளீர்கள்.

அடக்கமாக இருக்கும்போது மகிழ்வு தரும் கடல் சினந்தெழுந்தால் பேரழிவு; எண்ணிப்பார்த்தால் அச்சமாகத்தான் உள்ளது.

என்ன செய்ய முடியும்? இயற்கையின்முன் மனிதன் வலிமை குறைந்துபோகிறானே!

Expatguru said...

ஆமாம் நம்பி அவர்களே! நீங்கள் கூறியது 100க்கு 100 உண்மை. இதை பற்றி பழனத்தில் ஒரு கவிதை எழுதுங்களேன் ஐயா!

ஜீவி said...

//கடற்கரையை நோக்கி நிற்கும்போது நமது அகங்காரம் தவிடுபொடி ஆகிவிடுவதை உணர முடியும். அத்தனை பெரிய கடலின் முன்னால் நாம் நிற்கும்போது நமது அந்தஸ்து, படிப்பு, பகட்டு எல்லாம் தூசி போன்று கடல் காற்றுடன் பறந்து போய் நம்மை சாதாரண மனிதனாய் மாற்றி விடும். இந்த ஆற்றல் சமுத்திரத்தை விட வேறு யாருக்கு உண்டு? அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்த சில்லென்ற காற்றை சுவாசிக்கும்போதும், கடற்கரை அலைகள் நம் கால்களை தொடும்போது மனதில் குடியேறும் அமைதியும் சுகமும் அலாதியான ஒன்று.//

உள்ளத்தின் உள்ளுக்குள் இருந்து ஓடி
வந்த சத்தியமான வார்த்தைகள்.
கடலலைகளின் முன்னால் கரையில்
ஏகாந்த நிலையில் கடலின் அந்தக் கடைக்கோடியைப் பார்த்துக் கொண்டு, முடிவுறா அதன் முனையில் கவனத்தை செலுத்தி ஐந்து நிமிடங்கள் இருந்தால் போதும்,
மனிதனின் ஆணவம், அகந்தை எல்லாம் தூள்! தூள்!
பிர்மாண்டத்தின் சூட்சுமத்தைக் கண்டு
பிரமித்து நிற்க வேண்டியது தான்!

இந்தக் கருத்தை தங்கள் எழுத்தில்
இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
தொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்த்துக்கள்