1997ம் ஆண்டு. நான் சூரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம். திடீரென்று எனது 3 வயது குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றேன். குழந்தையை பார்த்த மருத்துவர், தெருக்கோடியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பரிசோதனை கூடத்தில் (lab) சென்று குழந்தையின் இரத்தத்தை பரிசோதித்து கொண்டு வருமாறு கூறினார். நானும் அப்படியே சென்று அந்த ரிப்போர்ட்டை மருத்துவரிடம் கொடுத்தேன். அதை 10 வினாடிகளுக்கு கூட அவர் பார்த்திருக்க மாட்டார். "உங்கள் குழந்தைக்கு மலேரியா உள்ளது. இது சரியாக 14 நாட்களாகும். ஆனால் சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து ஒரு மாத்திரை வந்துள்ளது. சற்று விலை அதிகம். ஆனால் இதை சாப்பிட்டால் இரண்டே நாட்களில் குணமாகிவிடும். உங்களுடைய விருப்பம் எப்படியோ அப்படி செய்யுங்கள்" என்று கூறினார்.
பதறிப்போன நானும் எனது மனைவியும், "விலை அதிகமானாலும் பரவாயில்லை, குழந்தை சீக்கிரம் குணமாக வேண்டும்" என்று அவரிடம் கூறினோம். அவர் உடனே ஒரு குறிப்பிட்ட மருந்து கடைக்கு போன் செய்து கடைக்காரரிடம் அந்த மருந்தை தருமாறு கூறினார். 200 ரூபாய் feesஐயும் வாங்கி கொண்டார்.
மருந்து கடைக்கு சென்றால் அவன் ஒரு மாத்திரையை கொடுத்து (ஒரே ஒரு மாத்திரை தான்) "இதன் விலை 300 ரூபாய். ஆனால் இதற்கு நான் ரசீது கொடுக்க முடியாது. ஏனென்றால் இது வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டது" என்று கூறினான். ஒரு மாத்திரை 300 ரூபாய் என்பது மிக அதிகமாக இருந்தாலும் மருத்துவர் ஏற்கனவே இதை பற்றி கூறி இருந்ததால் நாங்களும் அதை வாங்கி குழந்தைக்கு கொடுத்தோம். 4-5 நாட்களுக்கு பிறகு குழந்தை குணமாகியது.
சில நாட்களுக்கு பிறகு எங்களது பக்கத்து வீட்டில் இருந்த மற்றொரு மருத்துவரிடம் இதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர் கூறியது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "உங்களது குழந்தைக்கு வந்தது மலேரியாவாகவே இருந்திருக்காது. அவர் குறிப்பிட்ட அந்த பரிசோதனைக்கூடத்துக்கும் மருத்துவருக்கும் ஒருவித எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது (understanding). அதே போல, மருந்து கடைக்கும் மருத்துவருக்கும் கூட ஒரு understanding உள்ளது. உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்" என்று கூறினார்.
எனக்கு அந்த மருத்துவர் மேல் இருந்த மதிப்பே போய் விட்டது. 'சரி, எப்படியோ நம் குழந்தை குணமாகி விட்டது' என்று மனதை தேற்றிக்கொண்டேன்.
இது முடிந்து ஒரு 3 வருடங்களுக்கு பிறகு சென்னையின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் (ஒரு அமெரிக்க ராக்கெட்டின் பெயர் கொண்டது) எனது தந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை (open heart bypass surgery) நடைபெற்றது. இந்த மருத்துவமனையின் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளன. எனது தந்தையை அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள், இரண்டரை லட்சம் ரூபாயை 'ரொக்கமாக' கொடுக்கும்படி மருத்துவமனையில் கூறினார்கள். நான் காசோலையாகவோ (cheque) வங்கியில் எடுத்த draft ஆகவோ கொடுப்பதாக கூறியும் "எங்களுக்கு நீங்கள் cashஆக தான் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் நாளை அறுவை சிகிச்சை செய்ய முடியாது" என்று கறாராக கூறி விட்டார்கள். நாங்கள் அவசரம் அவசரமாக வங்கிக்கு சென்று பணத்தை ரொக்கமாக எடுத்து ஒரு பெரிய பையில் போட்டுக்கொண்டு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு வந்து அதை கொடுத்தோம். எங்களுக்கு மிகவும் பயமாக இருந்தது. வழியில் ஏதாவது ஆகியிருந்தால் மொத்த பணம் போவது மட்டுமல்லாமல் நாளை அறுவை சிகிச்சை கூட செய்ய முடியாமல் போய்விடுமே என்று மிகவும் பயந்து கொண்டிருந்தோம். நல்ல வேளையாக பணத்தை அந்த cashierஇடம் கொடுத்த பிறகுதான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது.
அறுவை சிகிச்சை நடந்து ஒரு 10 நாட்களுக்கு பிறகு எனது தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தோம். இரவு ஒரு 2 மணி இருக்கும். திடீரென்று எனது தந்தை விளக்கை போடுவதற்காக தூக்கத்தில் இருந்து எழுந்தார்.
திடுக்கிட்டு எழுந்த நாங்கள் அவரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து விட்டோம். அவரது மார்பிலிருந்து இரத்தம் சிறிது சிறிதாக கசிந்து கொண்டிருந்தது. உடனடியாக ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு மீண்டும் அந்த மருத்துவமனைக்கே அவரை அழைத்து சென்றோம். சாவகாசமாக வந்த மருத்துவர் அவரை உடனடியாக மீண்டும் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். என்ன விஷயம் என்றால், முதன் முறை அறுவை சிகிச்சை செய்து விட்டு தையல் போட்டார்கள் அல்லவா, அந்த தையல் பிரிந்து அந்த இடத்தில் infectionஆகி விட்டிருந்ததாம். மீண்டும் பழையபடியே வங்கிக்கு சென்று 25000 ரூபாயை ரொக்கமாக ஒரு பையில் போட்டுக்கொண்டு பணத்தை மருத்துவமனையில் கொடுத்தோம். (இத்தனைக்கும் இது மருத்துவர்களின் தவறு. ஆனால் இதை யாரிடம் போய் அழுவது?) ஒரு வழியாக நல்லபடியாக எல்லாம் நடந்து முடிந்தது.
எனது நண்பர்களிடம் இந்த இரண்டு சம்பவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இது போல பல இடங்களில் இப்போதெல்லாம் நடக்கிறதாம். ஒரு காலத்தில் மருத்துவர்களை கடவுளுக்கு இணையாக மதித்த காலம் இருந்தது. ஒவ்வொறு குடும்பத்துக்கும் 'குடும்ப மருத்துவர்' என்றே ஒருவர் இருப்பார். சுயநலமில்லா சேவையை செய்து வந்தனர். இப்பொழுது என்னவென்றால், வரும் நோயாளிகளிடம் எவ்வளவு பணம் பிடுங்கலாம் என்றே குறியாக இருக்கின்றனர். ஒரு மருத்துவ மாணவனிடம் இதை பற்றி நேரிடையாக கேட்டேன். அவன் கூறிய பதில் அதிர்ச்சியாக இருந்தது. "நாங்கள் பல லட்ச ரூபாய் கொடுத்து இந்த சீட்டை வாங்கி கஷ்டப்பட்டு (?) படித்து முடிப்பதற்குள் இன்னும் சில லட்சங்கள் எங்களுக்கு செலவாகின்றது. அதை நாங்கள் யாரிடம் வசூல் செய்வதாம்?" என்றான்.
இது போன்ற கிராதகர்களிடம் மாட்டிக்கொள்வதை விட மரணமே பரவாயில்லை என்றே தோன்றுகிறது. இவர்களையும் இது போன்ற மருத்துவமனைகளையும் தட்டி கேட்கவே முடியாதா? Indian Medical Association என்று ஒன்று உள்ளதாம். அதில் புகார் செய்தால் கூட ஒன்றும் நடக்காதாம். ஏனென்றால் அதில் உள்ளவர்கள் கூட மருத்துவர்கள் தானே! நான் எல்லா மருத்துவர்களை பற்றியும் குறை கூறவில்லை. நல்லவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் அது போன்றவர்கள் அத்திப்பூ பூத்தாற்போல் இருக்கிறார்கள்.
ஏழைகள் பரவாயில்லை. தங்களால் சிகிச்சையை afford செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும். எதிர்ப்பார்ப்பு இல்லாததால் ஏமாற்றமும் இல்லாமல் மரணத்தை தைரியமாக எதிர்கொள்கிறார்கள். பணக்காரர்களுக்கோ இந்த பிரச்னையே இல்லை. நடுவில் மாட்டிக்கொள்பவர்கள் இந்த நடுத்தர வர்கத்தினர்தான்.
இறைவா! மனிதனுக்கு நோயும் கடனும் மட்டும் வரக்கூடாது. மீதி எல்லாவற்றையும் சமாளித்து விடலாம்.
9 comments:
இது ஒன்றும் புதிதல்ல. பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒன்று தான். அரசு உடனடியாக இதில் தலையிட்டால் தான் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
கருத்துக்களுக்கு நன்றி, ஹமீத்.
இது போன்றவர்கள் எல்லா துறைகளிலும் உள்ளார்களே.
//இது போன்றவர்கள் எல்லா துறைகளிலும் உள்ளார்களே.//
ஆமாம். ஆனால் மருத்துவத்துறையில் இப்படி இருந்தால் நமது உயிருக்கே அல்லவா பாதகமாகிவிடுகிறது? இராணுவத்தில் இப்படி யாராவது இருந்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?
நல்ல பதிவு..வாழ்த்துக்கள்
....
ஓம் ...என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் ...என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் ...என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ....வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்
சூரத்தில் இருந்து-
ஐயா, டாக்டர் பேரு, ஊரு எல்லாம் சொல்லிடுங்க. அவரு ஒன்னும் தமிழ் பிலாக் எல்லாம் படிக்க மாட்டார்.நாங்களும்
ஜாக்கிரதையாய் இருப்போம் இல்லையா?
இருபத்துநான்கு மணி நேரமும் நடக்கின்ற கொள்ளை இது.
`படித்தவர்கள் இடும் கொள்ளை’ (White Collar robbery) என்று சொல்லலாமா?
கருத்துக்களுக்கு நன்றி உஷா. நீங்களும் சூரத்தில்தான் இருக்கிறீர்களா? நான் அந்த ஊரை விட்டு 10 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது அதே இடத்தில் இருக்கிறாரா என்று கூட தெரியாது.ஆனாலும் எனக்கு நேர்ந்த அனுபவத்தினால் அந்த ஊரின் மீது கோபம் இல்லை. இன்றும் சொல்கிறேன், குஜராத்திகள் தங்கமான மனிதர்கள். அந்த மருத்துவர் (மராத்திக்காரர்) இப்படி செய்துவிட்டாரே என்று தான் இருக்கிறது.
அடிக்கடி இங்கு வந்து உங்களது கருத்துக்களை சொல்லுங்கள். நன்றி.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, நம்பி ஐயா. அடிபட்டவனுக்கு தான் வலி தெரியும் என்பது போல இதை அனுபவித்து நம்மால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்ற வெறுப்பில் வந்த வார்த்தைகள் இந்த பதிவு. தெய்வம் நின்று கொல்லும் என்று கூறுவார்கள். இப்படி அநியாயமாக ஏமாற்றுபவர்களுக்கு தண்டனையை அந்த இறைவன் தான் வழங்க வேண்டும்.
பி.கு: உங்களது அருமையான பதிவுகளை கண்டு கூடுமான வரை தமிழ் சொற்களையே உபயோகப்படுத்த முயன்று வருகிறேன். ஆனாலும் சில வார்த்தைகளுக்கு தமிழில் என்னவென்று தெரியாததால் தடுமாற்றம் உள்ளது. தொடர்ந்து வருகை தந்து உங்களது கருத்துக்களை வெளியிடுங்கள்.
Post a Comment