கடினமான கால கட்டங்களில் நமக்கு உதவி செய்ய முன்பின் தெரியாத சாதாரண மக்கள் முன்வருவார்கள். அதிலும் தங்களுடைய உயிரை கூட பணயம் வைத்து பிறருக்காக உழைக்கும் இவர்கள் உண்மையிலேயே நமது வணக்கத்துக்கு உரியவர்கள் தான்.
நவம்பர் 26. இந்தியாவின் உயிர்நாடியையே உலுக்கிய மறக்க முடியாத நாள். இரவு சுமார் 10 மணியளவில் மும்பையின் வீ.டீ. இரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் புகுந்து அங்கு இருந்த பயணிகளின் மேல் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். பலர் சுருண்டு விழுந்து இறந்தனர். மேலும் பலர் குண்டு அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். சரியாக இதே நேரத்தில் ஒரு இரயில் பிளாட்பாரத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. நடந்து கொண்டிருந்த விபரீதத்தை மேலே உள்ள கண்ணாடி கூண்டிலிருந்து அறிவிப்பாளர் ஜெண்டே என்பவர் பார்த்தார். ஒரே நிமிடத்தில் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பயணிகளை கண்டதும் உடனடியாக செயலில் இறங்கினார்.
சரமாரியாக இந்தியிலும் மராத்தியிலும் "பயணிகளே! இரயில் நிலையம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பின் பக்கம் உள்ள ஒன்றாம் எண் கேட்டிலிருந்து வெளியேறுங்கள். யாரும் இஞ்ஜின் பக்கம் வராதீர்கள்" என்று அறிவித்து கொண்டே இருந்தார். இதை சற்றும் எதிர்பாராத பயங்கரவாதிகள் மேலே உள்ள கண்ணாடி கூண்டை நோக்கி சுட ஆரம்பித்தனர். ஆனால் ஜெண்டே அசரவில்லை. பயணிகளின் உயிரை காப்பாற்ற கீழே தரையில் குனிந்து கொண்டே தனது அறிவிப்புகளை விடாமல் கூறிக்கொண்டே இருந்தார். பயணிகள் அலறி அடித்து கொண்டு பின் பக்கம் உள்ள கேட் வழியாக வெளியே ஓடினர். ஜெண்டேயின் சமயோசித செய்கையால் நூற்றுக்கணக்கான உயிர்கள் தப்பின.
37 வயதே ஆன ஜெண்டே 10வது வரை தான் படித்துள்ளார். இரயில்வே கார்டாக இருந்த தனது தந்தை இறந்த பிறகு இவரும் இரயில்வேயில் சேர்ந்தார். இவரது செய்கையினால் உயிர் பிழைத்த ஒரு ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் திங்கட்கிழமை இவரது கண்ணாடி கூண்டுக்குள் நுழைந்து தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டாராம். தனது பெயரை கூட கூறாத அவர், வெளியே செல்லும் போது கூறிய வார்த்தை ' "ஜெய் ஹிந்த்".
5 comments:
really great!Vaalga pallandu!
மிகவும் அருமையான பதிவு. செய்திதாள்கள் கூட நினைவுபடுத்தாத ஜென்டோவை வலைப்பூ வாசகர்களுக்கு அறிமுகபடுத்தியமைக்கு நன்றிகள் பல
மிக அருமையான செய்தி. மனித நேயம் இன்னும் மரிக்கவில்லை.தன் உயிரையும் பொருட்படுத்தமால் பயணிகள் உயிரை காப்பாற்றிய அந்த மாமனிதருக்கு வலைப்பூ வாசகர்கள் சார்பாக வைப்போம் ஒரு சல்யூட்.வந்தே மாதரம்...ஜெய் ஷிந்த்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
//இதை சற்றும் எதிர்பாராத பயங்கரவாதிகள் மேலே உள்ள கண்ணாடி கூண்டை நோக்கி சுட ஆரம்பித்தனர். ஆனால் ஜெண்டே அசரவில்லை. பயணிகளின் உயிரை காப்பாற்ற கீழே தரையில் குனிந்து கொண்டே தனது அறிவிப்புகளை விடாமல் கூறிக்கொண்டே இருந்தார்.//
ஜெண்டே என்னும் உயர்ந்த மனிதரைப் புரிந்துகொள்ள இந்த வரிகள் போதும்.
அவர் நீடூழி வாழ திருவருள் கூடட்டும்.
மனுசனடா. இப்படித் தான் இருப்பான்.
Post a Comment