பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருச்சியில் எனது உறவினர் ஒருவரின் மகன் (பெயர் ரகு என்று வைத்து கொள்வோமே) இதே போல தனது PUC தேர்வை எழுதினான். அப்போதெல்லாம் 12ம் வகுப்பை பி.யூ.ஸி. என்று கூறுவார்கள். நன்றாக படிக்கும் பையன் தான். ஏதோ அவனது போதாத காலம் அந்த ஒரு தேர்வில் மட்டும் மதிப்பெண்களை குறைவாக எடுத்து விட்டான். மருத்துவராக அவனை பார்க்க நினைத்த அவனது தந்தைக்கு இது மிக பெரிய இடி விழுந்தது போல ஆகிவிட்டது.
அவனது தந்தை தனது இளம் வயதில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். தன்னால் தான் மருத்துவராக முடியவில்லை என்ற குறை மிகவும் இருந்தது. தனது மகனாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரிய மருத்துவராக வரவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.
அதனால் இளம் வயதிலிருந்தே ரகுவை மிகவும் கண்டிப்பாகவே வளர்த்தார். மிகவும் கோபக்காரராக இருந்தார். அடிக்கடி ரகுவை பிரம்பால் அடித்து பிய்த்து விடுவார்.அப்போதெல்லாம் தனியார் மருத்துவ கல்லூரிகளே கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றில் சேர்ப்பதற்கான பணம் அவரிடம் இல்லை. மகனை எப்போது பார்த்தாலும் "படி, படி" என்று விரட்டி கொண்டே இருப்பார். அவனும் பாவம் என்னதான் செய்வான். எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாகவே இருப்பான்.
தேர்வில் குறைவான மதிப்பெண்களை பெற்றதும் அவன் நிலை குலைந்து போய்விட்டான். அவனது தந்தைக்கோ கடும் கோபம். அவனை பிடித்து அடி அடி என்று பின்னி விட்டார். "நான் நன்றாக தான் படித்தேன், ஆனால் தேர்வு எழுதும்போது மறந்து விட்டது" என்று அவன் எவ்வளவு கூறியும் அவனை அவர் விடாமல் அடித்து துவைத்து விட்டார்.
ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் அழுது கொண்டே ரகு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான். போகும்போது தனது பி.யூ.ஸி. மதிப்பெண் சான்றிதழையும் கொஞ்சம் பணமும் மட்டும் எடுத்து கொண்டு "என்னை தேடாதீர்கள்" என்று ஒரு கடிதம் மட்டும் எழுதி வைத்து விட்டு சென்று விட்டான். வீட்டில் அனைவருக்கும் புதிய மன உளைச்சல். நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரது வீடுகளிலும் இவனை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை.
அவனது அம்மாவின் நிலைமை தான் மிகவும் பாவமாகி விட்டது. அழுது புலம்பி தீர்த்து விட்டாள். வீட்டுக்கு மூத்த மகன் இந்த மாதிரி செய்துவிட்டானே என்று அனைவருக்கும் அவன் மீது வெறுப்பே வந்து விட்டது. ஆனால் அந்த வெறுப்பு மெல்ல அவனது தந்தை மீது பாய துவங்கியது. அரசல் புரசலாக உறவினர்கள் அவனது தந்தை மீது பழி போட துவங்கினர். அவர் உடைந்து போய் விட்டார்.
இந்த உலகத்தில் நாம் யாரிடமாவது உதவி கேட்டால் இலவச ஆலோசனை கொடுப்பவர்களும் ஆலோசனை கேட்டால் உதவிக்கு வராதவர்களும் தானே அதிகம். கேரள மந்திரவாதி முதல் எல்லாவிதமான ஆரூடவாதிகளையும் போய் சந்தித்து விட்டார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக நிற்காத நதியை போல ஓடிவிட்டன. ஆரம்பத்தில் மிகவும் இறுக்கமாகவும் சோகமான சூழலில் இருந்த குடும்பத்தினர் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழந்து கடைசியில் தேடுவதையே கைவிட்டு விட்டார்கள்.
ஒரு 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. திடீரென்று ஒரு நாள் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியது ரகுவே தான். தான் அடுத்த வாரம் திருச்சிக்கு வருவதாக ரகு எழுதியிருந்தான். அவனது அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. என்ன இருந்தாலும் பெற்ற தாய் அல்லவா? மரணம் அடைந்து விட்டான் என்றே முடிவு கட்டிய பிள்ளை பல வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்புகிறான் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? அவனது தந்தைக்கு மகன் வீட்டை விட்டு சென்றுவிட்டான் என்கிற கோபம் இருந்தாலும் உள்ளுக்குள் அவன் திரும்பி வருவது அவருக்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை.
"வருகிறேன்" என்று மட்டும்தான் கடிதத்தில் எழுதியிருந்தானே தவிர தான் எங்கே இருக்கிறோம், எங்கு வேலை செய்கிறோம் என்று ஒரு விபரமும் அந்த கடிதத்தில் இல்லை.
அவனை வரவேற்பதற்காக நாங்கள் எல்லோரும் ஒரு நாள் முன்பாகவே போய் அவனது வீட்டில் காத்து கொண்டிருந்தோம். கடைசியில் திடீரென்று வாட்டசாட்டமாக பெரிய மீசையுடன் இராணுவ உடையில் ரகு வீட்டுக்குள் நுழைந்தான். அவன் வீட்டை விட்டு சென்ற போது ஒரு 17 வயது வாலிபனாக தானே இருந்தான். 7 வருடங்களில் மிகவும் மாறியிருந்தான். உள்ளே நுழைந்ததும் அவனை முதலில் பார்த்தது அவனது அம்மாதான். அவளுக்கு இவனை முதலில் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் ரகுவோ, அவளை பார்த்தவுடன் "அம்மா" என்று அழைத்தான். அவ்வளவுதான். ஓடி வந்து அவனை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவனது தந்தையும் அவனது முகத்தை வருடிக்கொடுத்து "ஏண்டா இப்படி செய்து விட்டாய்?" என்று கூறி அழ ஆரம்பித்து விட்டார்.
சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்து பிறகு அவனே என்ன நடந்தது என்று கூறினான். அப்பா அடித்து விட்டார் என்று வீட்டை விட்டு வெளியே சாலையில் சென்றுகொண்டிருந்த போது "இராணுவத்தில் சேருங்கள்" என்று ஒரு பள்ளியின் வாசலில் பெரிய விளம்பரத்தை பார்த்திருக்கிறான். அங்கு ஆள் சேர்க்கை நடந்து கொண்டிருந்ததாம். சரி, என்னதான் நடக்கிறது என்று உள்ளே சென்று பார்த்தால் இவனது உயரம், எடை மற்றும் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் சரி பார்த்திருக்கிறார்கள். இன்று மாலை அருணாசலப்பிரதேசத்துக்கு ஒரு குழு செல்கிறது. நீயும் அவர்களுடன் சேர்ந்துவிடு என்று உடனடியாக அவனை இராணுவத்தில் சேர்த்திருக்கிறார்கள். (அப்போதெல்லாம் இப்படி உடனடியாக சேர்க்கும் வழக்கம் இருந்தது). இவனும் ஒரு வேகத்தில் இராணுவத்தில் சேர்ந்துவிட்டான் (Long Service Commission). அங்கு சேர்ந்த பிறகு இவன் இராணுவத்தின் செலவிலேயே பூனாவில் உள்ள மிக பெரிய இராணுவ மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறான். ஆனால் ஒரு வைராக்கியத்தில் வீட்டுக்கு கடிதமே எழுதவில்லை. படிப்பை முடித்தபின் இராணுவத்திலேயே மருத்துவராக பணியாற்றியிருக்கிறான். படிப்பில் சேர்க்கும் முன்பே அவர்கள் இவனிடம் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி கொண்டார்களாம்.
எது எப்படியோ, தனது தந்தையின் கடைசி காலத்துக்குள் அவரது விருப்பதை போலவே ஒரு மருத்துவராகி விட்டான். கதைகளில் வருவது போல அவனுடைய வாழ்க்கையும் தந்தை அடித்த அடியால் பாதை மாறி விட்டது.
இதை எதற்கு இப்போது கூறுகிறேன் என்றால், தேர்வு நேரத்தில் தாய் தந்தையர் குழந்தைகளிடம் மிகவும் கடினமாக நடந்து கொள்வதால் எவ்வளவு பின் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்வதில்லை. என்னவோ உலகத்தில் பொறியாளர் அல்லது மருத்துவர், இந்த இரண்டு தொழில்களை தவிர வேறு தொழிலே இல்லை என்பது போல் பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். வாழ்க்கையில் சாதிக்க மதிப்பெண்கள் மட்டும் இருந்தால் போதாது. இறைவனின் அருள் இருந்தால் அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டியது நடந்தே தீரும்.
இன்று வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பவர்களை பாருங்கள். கண்டிப்பாக அவர்களது மதிப்பெண்களை பார்த்தால் 100க்கு 100 வாங்கி இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் street-smartஆக இருந்தால் தான் பிழைக்க முடியும். இதற்கும் மதிப்பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை.
குழந்தைகள் ஏதோ ஒரு பட்டதாரி ஆக மாற வேண்டும், உண்மைதான். அதற்கு உண்டான அத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து தருவது பெற்றோரின் கடமை. ஆனால் அதற்காக அத்தனை பாடங்களிலும் 95க்கு மேல் எடுக்க வேண்டும் என்று அவர்களை வாட்டி எடுப்பது எந்த விதத்தில் ஞாயம்?
பெற்றோர்களே, உங்களது குழந்தைகளின் நலனில் உண்மையாகவே அக்கரை இருந்தால் அவர்களை நல்ல ஒழுக்கத்துடன் நல்ல பண்புகளுடன் வளருங்கள். உங்களுடைய விருப்பத்தை விட அவர்களின் விருப்பம் என்ன என்று கேட்டு அதன்படி வாழ்க்கையை அமைத்து கொள்ள உதவுங்கள். மீதியை இறைவன் பார்த்து கொள்வான்.
6 comments:
//இன்று வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பவர்களை பாருங்கள். கண்டிப்பாக அவர்களது மதிப்பெண்களை பார்த்தால் 100க்கு 100 வாங்கி இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் street-smartஆக இருந்தால் தான் பிழைக்க முடியும். இதற்கும் மதிப்பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை.//
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. படிச்சதும் பாரசிட்டமால் போட்டுகிட்டமாதிரி இருக்குது :)
வாங்க சுந்தரா. "படிச்சதும் பாரசிட்டமால்.." அட! இது கூட நல்லா இருக்கே!
//மீதியை இறைவன் பார்த்து கொள்வான்.//
அருமையான கட்டுரையை அருமையாக முடித்திருக்கிறீர்கள்.
அன்புடன்
அ. நம்பி
நன்றி, நம்பி ஐயா.
good
கருத்துக்கு நன்றி.
Post a Comment