Saturday, 29 April 2017

மாறிய பாதைகள்

சமீபத்தில் பிரபல பாடகருக்கும் இசை அமைப்பாளருக்கும் நடந்த மனஸ்தாபத்தை பற்றி படித்த போது அவர்களது 40 கால நட்புக்கு என்ன ஆயிற்று என்ற கேள்வி பலரது மனதில் உறுத்தியது. அவர்களை பற்றி தெரியாது. ஆனால் 22 வருடங்களுக்கு முன் என்னை மிகவும் மனதளவில் பாதித்த ஒரு அனுபவம்தான் நினைவில் வந்தது.

1995ம் ஆண்டு ஜனவரி மாதம்  துபாயில் வேலை கிடைத்து முதன்முதலில் அன்னிய நாட்டில் கால் பதித்தேன். புதிய ஊர், தெரியாத முகங்கள், குடும்பத்தை விட்டு பிரிந்த மனத்துயரம் என்று மிகவும் என் மனதை வாட்டிய நேரம். எனது நண்பர் (பெயர் வேண்டாம்) நான் துபாய் போகிறேன் என்றவுடன், தனது நண்பர் மதன் என்பவரின் தொலைபேசி எண்ணை கொடுத்து அவரிடம் தொடர்பு வைத்து கொள்ளுமாறு கூறினார். நண்பரின் நண்பர் எனக்கும் நண்பர் என்ற வகையில் நானும் வேலையில் சேர்ந்த ஒரு பத்து நாட்களில் அவரை தொடர்பு கொண்டேன்.


எனது நண்பரின் பெயரை சொன்னவுடன் மதன் மிகவும் மகிழ்ச்சியானார். அவரும் எனது நண்பரும் பல வருடங்கள் துபாயில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தார்களாம். அவரை பற்றி மிகவும் விசாரித்தார். மதன், தனது மனைவியுடனும் பள்ளிக்கு செல்லும் மகளுடனும் துபாயில் பல வருடங்களாக இருப்பதாக கூறினார்.  இப்படி அறிமுகமான எங்களது தொலைபேசி நட்பு, நாளடைவில் சிறிது சிறிதாக வளர தொடங்கியது.

முதலில் வாரத்துக்கு ஒரு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். நாட்கள் செல்ல செல்ல, கிட்டத்தட்ட தினமும் பேசிக்கொள்ளும் அளவுக்கு எங்கள் நட்பு வளர்ந்தது. குடும்பத்தை விட்டு பிரிந்து வெளி நாட்டில் வேலை செய்கின்ற ஆயிரக்கணக்கான மனிதர்களின் ஒரே இதயத்துடிப்பு நண்பர்கள் தானே. அதுவும் இல்லாவிட்டால் வாழ்க்கையே நரகமாகிவிடாதா? 

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. ஒரு நாள் மதன் என்னிடம், "எத்தனை நாட்கள் தான் நாம் இப்படி தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது? இன்று மதிய உணவுக்கு எங்கள் வீட்டுக்கு சாப்பிட வாருங்கள்" என்று அழைத்தார்.

அவர் தினமும் மதிய உணவுக்கு வீட்டுக்கு செல்வாராம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் என்னை ஒரு இடத்துக்கு பஸ்ஸில்  வரச்சொல்லிவிட்டு அங்கிருந்து அவரது காரில் என்னை ஏற்றிக்கொண்டு செல்வதாக ஏற்பாடு. முதலில் மறுத்த நான், அவர் மிகவும் வற்புறுத்திய பிறகு ஒப்புக்கொண்டேன். அவருக்கு பள்ளிக்கு செல்லும் குழந்தை இருப்பதாக கூறியதால், ஒரு கடையில் பெரிய பிஸ்கட் பாக்கெட் ஒன்றை குழந்தைக்காக வாங்கி சென்றேன்.

சொன்னபடி சரியான நேரத்துக்கு மதன் என்னை தனது காரில் வந்து அழைத்து சென்றார். நல்ல சொகுசு வண்டி. அவர் துபாயில் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருப்பதை அறிந்து கொண்டேன். என்னை கண்டவுடன் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கும் தான். புதிய ஊரில் நம்மை யார் இவ்வளவு அன்புடன் நடத்துவார்கள்? வழி முழுவதும் தனது பழைய நண்பர்களை பற்றியும் சொந்த ஊரை பற்றியும் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டே வந்தார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிந்தபின் அவரது வீட்டை அடைந்தோம். ஒரு 25 அல்லது 30 மாடி கட்டிடத்தில் அவர் 16வது மாடியில் இருந்தார்.

அவரது மனைவி கதவை திறந்தார். மதனில் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன். அவரை பார்த்தவுடன் நான் வணக்கத்தை தெரிவித்தேன். ஆனால் அவரோ முகத்தை கடுகடுவென்று வைத்து கொண்டார். எனக்கு என்னவோ போல் ஆகி விட்டது. மதன் என்னை வாசல் அறையின் சோபாவில் உட்கார வைத்து விட்டு தன் மனைவியுடன் உள்ளே சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் வரவில்லை. அவர்கள் இருவரும் உள் அறையில் ஏதோ பேசுவது மட்டும் கேட்டது, ஆனால் என்னவென்று தெரியவில்லை.

நான், வாசல் அறையில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் குடும்ப புகைப்படம் போன்றவற்றை பார்த்துக்கொண்டிருந்தேன். வெகு நேரத்துக்கு பிறகு கணவன் மனைவி பேசிக்கொண்ட குரல்கள் சற்றே பெரிதாக ஆரம்பித்தது. ஏதோ காரசாரமாக இருந்தது தெரிந்தது. ஒரு கட்டத்தில் மதனின் மனைவி உரத்த குரலில் கத்துவது தெள்ளத்தெளிவாக கேட்டது. "கண்டவனை எல்லாம் சாப்பிட கூப்பிடுவீங்க, பொங்கி போட நான் என்ன வேலைக்காரியா?" என்று கேட்க அதற்கு மதன் "சும்மா இருடி, அவருக்கு கேட்க போகுது" என்றார். என் மனது சுக்கு நூறாகி விட்டது.

பல முறை மதன் சாப்பிட அழைத்ததால் தான் நான் ஒப்புக்கொண்டேன். வேண்டா விருந்தாளியாக வந்து விட்டோமே என்று மனது அடித்துக்கொண்டது. அப்படி வெளியே ஓடிப்போய் விடலாமா என்று தோன்றியது. புதிய ஊரில் வழியும் தெரியாதே. எங்கே இருக்கிறோம் என்றும் தெரியாது. கடவுளே, இது என்ன சோதனை!

சில நிமிடங்களில் மதன் ஒன்றுமே நடக்காதது மாதிரி முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு வாசல் அறைக்கு வந்தார். "வாங்க, சாப்பிடலாம்" என்றார். நான் "பரவாயில்லை மதன். இன்று எனக்கு வயிறு சரியில்லை. இன்னொரு நாள் வந்து சாப்பிடுகிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்" என்றேன். அவர் மிகவும் வற்புறுத்தி என் கையை பிடித்து இழுத்து டைனிங் டேபிளில் உட்கார வைத்து விட்டார். ஒரு பாத்திரத்தில் சாதம், ஒன்றில் குழம்பு, ஒரு சிறிய பாத்திரத்தில் ஏதோ ஒரு கறி என்று சிம்பிளாக ஆனால் குறைவாக இருந்தது. மதனின் மனைவி தட்டை "ணங்" என்று சத்தத்துடன் வைத்தவுடன் நான் அவமானத்தின் எல்லைக்கே சென்று விட்டேன். 'கடவுளே, இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு என்னை ஏன் தள்ளினாய்' என்று மனது அடித்துக்கொண்டது.

அன்றே ஒளவைக்கிழவி பாடி சென்றுவிட்டாளே. 

"கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை, அதனினும் கொடிது ஆட்றொனாக்கொடு நோய், அதனினும் கொடிது அன்பிலாப்பெண்டிர், அதனினும் கொடிது இன்புற அவள் கையில் உண்பது தானே"

உண்மையிலேயே அனுபவித்து பாடியிருக்கிறாள் பாட்டி. சத்தியமாக நான் இதை அன்று  உணர்வுபூர்வமாக அனுபவித்தேன். 

சாதத்தை ஒரு ஸ்பூனில் எடுத்து என் தட்டில் போட்டுக்கொண்டு "மதன், நான் தான் சொன்னேனே எனக்கு வயிறு சரியில்லை என்று. உங்களுக்கு கம்பெனி கொடுப்பதற்காக நான் இங்கு உட்கார்ந்து கொள்கிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்" என்றேன். நான் தட்டில் போட்ட அந்த ஸ்பூன் சாதத்தை மதன் மனைவி பார்த்து கொண்டே இருந்தாள். மதன் சாப்பிட்டு விட்டு முடியும் வரை ஒவ்வொரு பருக்கையாக நானும் சாப்பிட்டேன். அவை பருக்கைகள் அல்ல, நெருப்பு துண்டங்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் எடுத்துக்கொண்டார் சாப்பிட. வாழ்க்கையில் எனக்கு மிக நீண்ட அரை மணி நேரம் அதுவாகத்தான் இருந்திருக்கும்.

ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு அவர் எழுந்திருக்கும் போது நானும் எழுந்திருந்து, மறக்காமல் கொண்டு வந்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை அவர் மனைவியிடம் கொடுத்தேன். "குழந்தையிடம் கொடுத்து விடுங்கள். அவள் பள்ளிக்கு சென்றிருப்பதால் அடுத்த முறை அவளை சந்திக்கிறேன்" என்று கூறினேன்.

அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டு நான் மதனுடன் மீண்டும் காரில் பயணம் செய்தேன். என்னை இறக்கி விட்டவுடன் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டேன். வழி முழுவதும் மதன் பேசவேயில்லை. சாப்பிட போகும் பொழுது இருந்த கலகலப்பான பேச்சு திரும்பி வரும் பொழுது மாயமாகி விட்டது. மனதில் ஒரு இருக்கமும் அவமானமும் பிடுங்கி தள்ளியது.

அதன் பிறகு எனது தொலைப்பேசி நட்பை குறைத்துக்கொண்டேன். பாவம், அவரது மனைவிக்கு என்ன பிரச்னையோ? ஆனால் இந்த அனுபவம் எனக்கு ஒரு மிக முக்கியமான வாழ்க்கை பாடத்தை கற்றுத்தந்தது. 

நட்பு என்பது ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும். கூட்டி கழித்து பார்த்தால் வாழ்க்கையில் ஒன்றுமே நிரந்தரம் இல்லை. வாழ்க்கையே நிரந்தரம் இல்லை. இதில் சிலர் பல வருட கால நட்பு என்றெல்லாம் வெளியே கூறிக்கொள்கிறார்கள். அனைத்தும் சந்தர்ப்பவாதம் என்பது தான் நிதர்சனம். அனைத்துமே இரயில் பயண நட்பு தான். ஆனால் அந்த நட்பின் நினைவுகள் இனிமையாக இருக்க வேண்டும் அல்லவா?

இருக்கும் வரை அனைவரிடமும் அன்புடன் பழகி பேசுவோம். முடிந்தவரை உதவுவோம். அப்படி உதவ முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, பிறருக்கு உபத்திரவம் செய்யாமல் இருப்பதே பெரிய உதவி தான். மனதளவிலும் யாரையும் அவமானப்படுத்தி விடக்கூடாது. இன்று இருக்கும் நிலை நாளைக்கு இருக்காது. இன்று "தாழ்ந்த" நிலையில் இருப்பவர் நாளை காலத்தின் கோலத்தால் "உயர்ந்தவராக" ஆகி விடுவார். பத்தே வருடங்களில் கண் முன்னே சரிந்த மாபெரும் மனிதர்களை கண்கூடாக பார்க்கிறோமே. சுடு சொற்களால் எந்த விதமான பயனும் இல்லை. சிற்றெறும்புக்கும் யானையை போல ஒரு வாழ்க்கை உள்ளது அல்லவா? பிறரை புண்படுத்துவதில் கிடைக்கும் "வெற்றி" நிலையில்லாதது. காலத்தின் வெள்ளத்தில் அடித்து கொண்டு போய் விடும். 

ஒரு மனிதன் இறந்த பிறகு பிறர் கூறுவது "நல்ல மனுஷன் போயிட்டாம்ப்பா" என்ற வார்த்தை தான்.  "உலகின் மிக பணக்காரன் போய் விட்டான்" என்று இல்லை. வாழ்வது ஒரு வாழ்க்கை. அதை அன்புடன் வாழ்வோமே.
14 comments:

Kalyanasundaram said...

சிறுமைப் பட்டதை வெளிப்படுத்த நமது ஈகோ காரணமாக பொதுவாகத் தயங்குவோம்...
ராஜுவுக்கு பெரிய மனசு..நடந்ததை அழகிய நடையில் அருமையாக எழுதியுள்ளார்
அந்த நண்பர் மதனைப் பார்த்து பரிதாபம்தான் ஏற்பட்டது...
முகம் திரிந்து நோக்க குழையும் விருந்து என்பது கூட அறியாத மாதரசியோடு இல்வாழ்க்கை எனும் தண்டனை அவருக்கு

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு கதை அந்த சூழ்நிலைகே கொண்டு சென்று விட்டது மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

சாந்தி கணேஷ்

G.M Balasubramaniam said...

நட்பு எனப்படும் வலையுலக அறிமுகங்களை நேரில் சந்தித்து உரையாடினால்தான் தெரியும் இந்த அனுபவங்கள் எல்லோருக்கும் பாடமாக இருக்கட்டும் எனக்கு உறவுகளிடம் அந்த மாதிரியான அனுபவம் உண்டு

தமிழானவன் said...

இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. கணவர்களின் எல்லா நட்பையும் மனைவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் ஏதோ ஒரு சூழ்நிலையின் பலிகடாவாக நாம் மாறிவிடுகிறோம். இதையும் ஒரு அனுபவமாகக் கடந்து செல்வோம்

காரிகன் said...

நண்பரே,

ஒரு நிகழ்வை இத்தனை உயிரோட்டமாக எழுதுவதென்பது சிலரால் மட்டுமே முடியும். உங்களின் வார்த்தைகள் அத்தனை தூரம் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன.

பாராட்டுக்கள்.

உங்கள் பதிவை படித்ததும் தோன்றியது எளிமைதான் இனிமை.

அதுவே நெஞ்சத்தை தொடுகிறது.

நிறைய எழுதுங்கள் குரு.

Expatguru said...

நன்றி ஸ்ரீனி.

Expatguru said...

நன்றி சாந்தி

Expatguru said...

நன்றி GMB சார்.

Expatguru said...

நன்றி தமிழானவன்.

Expatguru said...

உற்சாகமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி, காரிகன்.

Arul Jeeva said...

மாறிய பாதைகள் ஒரு சிறந்த நாவலைப் படிப்பது போலிருந்த து.கதைக் களத்திற்கே கொண்டு சேர்க்கின்றன அற்புதமான வரிகள்.

Expatguru said...

நன்றி அருள்.

சார்லஸ் said...

உங்கள் பதிவுக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. ' மாறிய பாதைகள் ' போன்ற அனுபவங்கள் பெரும்பான்மையோர் வாழ்வில் வந்து போயிருக்கும். யதார்த்தத்தை மிக அருகில் பார்த்தது போன்ற அனுபவத்தை உங்களின் எழுத்து ஏற்படுத்துகிறது. ஆண்கள் இருவரின் நட்பையே பெண்கள் எளிதாக எடுத்துக் கொள்ளாதபோது ஆண் பெண் இருபாலரின் உண்மையான நட்பை எப்படி எடுப்பார்களோ!?

உங்களுக்குத்தான் எத்தனை விதமான அனுபவங்கள்!! ஒவ்வொன்றும் ரசிக்கத் தகுந்தவையாய் உள்ளது. நானும் தற்போது நாற்பது வருடம் கழித்து ஒரு நண்பனை சந்திக்கப் போகிறேன். உங்கள் பதிவு ஒரு பாடமாய் இருக்கட்டும். எதற்கும் தயாராக இருக்க வேண்டியதுதான்!

Expatguru said...

மிக்க நன்றி சார்ல்ஸ். உங்களது உற்சாகமான வார்த்தைகள் தான் ஒவ்வொரு முறை எழுதுவதை விட்டு விடலாமா என்று நான் எண்ணும்போது வந்து தடுக்கின்றன. புதிய படைப்புகளை முகநூலுக்கு மாற்றியுள்ளேன். தயவு செய்து முகநூலில் Madrasthamizhan என்ற பக்கத்தை 'Like' மற்றும் 'Follow' செய்யவும்.