Friday, 6 September 2013

மெளனத்தின் மொழிகள்

சமீபத்தில் எனது உறவினர்  ஒரு அருமையான பொன்மொழியை அனுப்பியிருந்தார். அது என்னவென்றால், "உலகிலேயே மௌனம் தான் அதிக முறை தவறாக மொழி பெயர்கபட்டிருகிறது!". சற்றே சிந்தித்து பார்த்தால், உலகிலேயே மெளனம் தான் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றே கூறலாம்.

ஒன்றுமே பேசாமல் இருந்தால் அதற்கு பேர் தான் மெளனமா? அப்படி பார்த்தால் மெளனத்திற்கு மொழி இல்லையா? ஊமைகள் பேச முடியாது என்று யார் சொன்னார்கள்? சொல்ல போனால் பேச தெரிந்தும் கண்டதை பேசுபவர்களை விட பேசாமல் பேசும் ஊமைகள் எவ்வளவோ மேல்.

வார்த்தை வராவிட்டால் என்ன, பொருள் புரியாதா என்ன? மெளனத்தின் பெருமையை நமது முன்னோர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். காஞ்சி மஹா பெரியவர் பல நாட்கள் தொடர்ச்சியாக மெளன விரதத்தில் இருப்பார். குரு பகவானே மெளனமாக இருந்து அருள் பாலிப்பவர் என்று புராணம் கூறுகிறது. குரு பகவானை சுற்றி ராஜ ரிஷிகள் சூழ்ந்து இருப்பார்களாம். சாமானிய மக்களின் சந்தேகங்களை தீர்க்க வல்ல இந்த ரிஷிகள் தங்களது சந்தேகங்களை குரு பகவானிடம் கேட்க அவர் மெளனமாகவே அதற்கான விடைகளை கூறி ஞான உபதேசம் செய்வாராம். அதனால் அவருடைய பெயரே மெளனகுரு என்று கூறுவார்கள்.

மெளனம் காக்க வேண்டிய நேரத்தில் பேசுவதாலும், பேச வேண்டிய நேரத்தில் மெளனமாக இருப்பதாலும் தான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. திரெளபதியை துகிலுறிக்கும் போது "ஞானி" என்று அழைக்கப்படும் பீஷ்மர் நடக்கும் அநியாயத்தி தட்டி கேட்காமல் மெளனம் காத்ததால் தான் மஹாபாரத போர் அறிவிக்கப்பட்டது. அதே போல‌ மெளனமாக இருக்க வேண்டிய போது பேசி காரியத்தை கெடுத்தவர்கள் சரித்திரத்தில் ஏராளம்.

இராமன் சீதையை முதன்முதலில் பார்த்த போது ஒருவருக்கு ஒருவர்  "ஐ லவ் யூ" என்று சொல்லவில்லை. இன்னும் சொல்ல போனால் வாய் திறந்து இருவரும் எதையுமே கூற‌வில்லை. அண்ணலும் அவளும் நோக்க அந்த தருணத்தில் கண்கள் மட்டும் பேசின. நாணம் பேசும்போது பேசும் சொல்லுக்கு என்ன பயன்?

வேலைக்கு காத்திருப்பவனை கேளுங்கள். யாராவது நமக்கு வேலை தரமாட்டார்களா, யாராவது மெளனத்தை உடைத்து நல்ல சேதியை கூற மாட்டார்களா என்று ஏங்கும் ரணம் அனுபவித்தவர்களுக்கு மட்டும் தெரியும் . பெண் பார்த்து விட்டு எதையுமே கூறாமல் மெளனாக இருக்கும் பிள்ளை வீட்டார்களை என்னவென்று சொல்வது? அந்த வலி பெண்ணை பெற்றவனுக்கு தான் தெரியும்.


நமது நாட்டில் பெண்கள் பல சிரமங்களை மெளனமாகவே எதிர்கொள்கின்றனர். அவர்கள் மெளனம் காப்பதனால் தான் பல குடும்பங்கள் சிதறாமல் இருக்கின்றன என்பதே உண்மை. வாய் திறந்து கூறி விட்டால் ஒரு சொல்லுக்கு மதிப்பே கிடையாது. பேசாமல் பேச வல்ல ஒரு பொருள் உலகத்தில் உள்ளது என்றால் அது மெளனம் மட்டுமே.

சொல்லாமல் சொல்லும் சொல்லுக்கே என்றும் மதிப்பு. மெளனம் பேச ஆரம்பித்து விட்டால் அதை எதிர்கொள்ளும் சக்தி யாருக்கும் கிடையாது. சாது மிரண்டால் நாடு கொள்ளாது என்று அதனால் தான் கூறுகிறார்கள்.

இன்று நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை சாதாரண மக்கள் எதிர்க்க முடியாமல் மெளனம் காக்கின்றனர். அதனால் தான் அக்கிரமக்கார அரசியல்வாதிகளுக்கு துளிர் விட்டு போய் விட்டது. 1975 முதல் 1977 வரை இந்தியாவின் இருண்ட காலம் என்றே கூறலாம். இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்து நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டிருந்த நேரம். பேச்சு உரிமை கூட இல்லாத அந்த கால கட்டத்தில் மக்கள் பொறுமையாக மெளனம் காத்திருந்தனர். பல கொடுமைகளை மக்கள் சந்தித்தனர். தேர்தல் வந்த போது கொடுங்கோல் ஆட்சியை தூக்கி எறிந்து தங்களது சக்தியை சாதாரண மக்கள் நிரூபித்து விட்டனர்.

மெளனம் ஒரு மிக பெரிய ஆயுதம். ஒருவன் வாய் திறந்து கூறிவிட்டால் அவனது மனதின் எண்ண ஓட்டங்கள் என்னவென்பதை யூகிக்க முடியும். அதனால் தான் ஒற்றர் படையினருக்கு அந்த நாட்களில் இருந்து இன்று வரை ஒரே ஒரு தாரக மந்திரத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்: Keep your eyes and ears open, and mouth shut !

நாட்டின் பிரதமர் மெளனத்தை கலைத்து ஏதாவது ஒரு வார்த்தையை கூறிவிட்டால்  பொருளாதார சந்தையில் அதன் எதிரொலி கேட்கிறது. கெட்ட செய்தியை கூறுவதற்கு பதில் மெளனமாகவே இருக்க பலர் விரும்புகின்றனர். இது ஒரு தவறான அணுகுமுறை என்றே நான் நினைகிறேன். மெளனம் காக்காமல் சொல்ல வந்ததை நேரிடையாக கூறிவிட்டால் பிற்காலத்தில் வலி தெரியாமல் இருக்கும்.

மெளனத்தை உண்மையாகவே புரிந்து கொள்பவன் யோகி. வெளியே வராத வரை வார்த்தையும் உள்ளே போகாத வரை விஷமும் யாருக்கும் தெரியாதவையே. சொல்லாத சொல்லின் சிறப்பை மெளனம் கலைத்து கூறிவிட்டேன். நீங்களும் படித்து விட்டு வழக்கம் போல மெளனம் காக்காமல் பின்னூட்டத்தில் ஏதாவது எழுதிவிட்டு போங்களேன்!



Monday, 19 August 2013

கூழுக்கும் ஆசை

ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் வரை  நமக்கு அதன் மதிப்பு  தெரியாது என்பது எவ்வளவு உண்மை!

வேறு ஒன்றுமில்லை. கருகருவென்று வீரப்பன் அளவுக்கு இல்லாவிட்டாலும் எனக்கு ஓரளவுக்கு பெரிய  மீசை இருந்தது. அதில் தொங்கு மீசை வேறு விசேஷம். ஒரு மனிதன் எதை  வேண்டுமானாலும் விட்டு கொடுத்து  விடலாம். ஆனால் மீசையை விட்டு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய தியாகம்! நான் போற்றி பாதுகாத்து வந்த பொக்கிஷத்தின் மேல் எந்த சிருக்கனுடைய (சிருக்கிக்கு ஆண் பால் என்ன?) கண் பட்டதோ தெரியவில்லை. கண் பட்ட இடத்தில் புண் பட்டது போல, ரோஜா பூந்தோட்டத்தின்  நடுவில் முளைத்த கள்ளிச்செடி போல திடீரென்று ஒரு வெள்ளை முடி முளைத்து விட்டது.

Who is the white sheep என்று அலறி அடித்து கொண்டு கத்திரியால் லாவகமாக வெட்டினேன். சோதனை மேல் சோதனையாக சில வாரங்களில் மீண்டும் அந்த காளான் முளைத்து. அதுவும் அதே இடத்தில். பட்ட இடத்திலேயே பட்டால் ஒரு மனிதன் எவ்வளவு தான் தாங்குவது? மீண்டும் எடு கத்திரியை. இப்படியே கத்திரிக்கும் மீசைக்கும் நடந்த போட்டா போட்டியில்  ஒரு கட்டத்தில் ஒற்றுமை ஓங்குக என்று ஒன்றுக்கு பதில் இரண்டு மூன்று என்று வெள்ளி திரிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.

போகிற போக்கை பார்த்தால் உதட்டுக்கு மேல் ஒரு வெள்ளை புரட்சியே ஏற்பட்டு விடும் போல இருந்தது. ஒரு நாள் தெரியாத்தனமாக சவரம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டேன்.  எதேச்சையாக கண்ணாடியில் முகத்தை பார்த்தால் தாடியிலும் லேசாக புற்றீசல் போல வெள்ளை ஒற்றர்கள் தோன்ற ஆரம்பித்து விட்டார்கள். Disaster Management என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சீக்கிரமாக ஏதாவது  செய்தே ஆக  வேண்டும். பேரிடர் என்பது மனிதனுக்கு மீண்டும் மீண்டும் வந்தால் என்னதான் செய்வது? இப்படி நொந்து நூடுல்ஸாகி இருந்த போது தான் 'பொறுத்தது போதும் போர் வாளை எடு' என்று எனது மகள் எந்த ஆண் சிங்கத்திடமும் கேட்க கூடாத அந்த வசனத்தை கூறி விட்டாள்.

நான் இத்தனை ஆண்டுகளாக போற்றி பாதுகாத்து வளர்த்த, என் உயிரினும் மேலான, ரத்தத்தின் ரத்தமான, உடன்பிறப்பான, எனது ஆசை மீசையை எடுத்து விடுமாறு கூறினாள். உள்ளம் பதை பதைத்தது. மீசை துடி துடித்தது. "என்ன சொன்னாய்?" என்று சிவாஜி கணேசன் மாதிரி கர்ஜிக்க முற்பட்ட போது மகளுக்கு ஒத்து ஊதிக்கொண்டு தங்கமணி "இப்படி தாண்டி என்னை பெண் பார்க்க வருவதற்கு முன் தொங்கு மீசையோட போட்டோவை அனுப்பினார். நான் அப்பவே reject செய்திருக்கணும்" என்று சந்தடி சாக்கில் சிந்து பாடினாள்.

"அப்பா, ப்ளீஸ் அப்பா" என்று எனது மகள் கெஞ்சிய பொழுது அதன் பின் விளைவுகள் எனக்கு தெரியவில்லை. முன் விளைவுகள் தான் தெரிந்து விட்டதே! ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை Dye. வேறு வழியே இல்லை. விழித்தாலும் மழித்தாலும் என்னுடைய முகம் என்னுடையது தான். அதனால் அந்த சுபயோக சுபதினத்தில் - சொல்லவே மனம் துடிக்கிறது -  எனதருமை மீசையை எடுத்து விட்டேன்.

பிரளயம் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல் பிடுங்கிய பாம்பு, கொடுக்கை பிடுங்கிய தேள், வாலறுந்த நரி (ச்சீ வேறு உவமையே கிடைக்கவில்லையா) அது போல தான் மீசை இல்லாத ஆண் என்பதை அதை எடுத்த அடுத்த கணம் உணர்ந்தேன். என்னை பார்த்த என் பெண்ணின் முதல் reaction - தாங்க முடியாமல் சிரித்து விட்டாள். அவள் சிரிக்க சிரிக்க எனக்கு கோபமும் அழுகையும் பொத்திக்கொண்டு வந்தது. இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

வெளியே கடைக்கு சென்றால் பின்னால் நாய் துரத்துவது போல ஒரு பிரமை. அலுவலகத்துக்கு சென்றால் அனைவரும் முதலில் ஒரு மாதிரி என் முகத்தை பார்த்தார்கள். எனக்கு பின்னால் அவர்கள் சிரித்தது என் காதுகளில் துல்லியமாக கேட்டது. நான் என்னதான் செய்வது? வடிவேலு மாதிரி 'இருக்கிறவன் வெச்சுக்கிறான், இல்லாதவன் வரஞ்சுக்கிறான்' என்று பென்சிலால் மீசையை வரைந்து கொள்ளவா முடியும்? இல்லை டோப்பாவா வைத்து கொள்ள முடியும்? நெருங்கிய நண்பர்கள் "பார்க்க சகிக்கலைடா" என்று கலாய்த்தார்கள். சிலர் "மோசமா இருந்த மூஞ்சி இப்ப படு மோசமா இருக்குடா" என்றார்கள்.

வீட்டுக்கு வந்து டி.வியை போட்டால் என்னை வெறுப்பேற்றவே போட்ட மாதிரி வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தூர்தர்ஷனில் ஓடிக்கொண்டிருந்தது. மீசை துடிதுடிக்க சிவாஜி வசனம் பேசிக்கொண்டிருந்தார். செய்திகள் பார்க்கலாம் என்று சேனலை மாற்றினால் இலங்கை ஜனாதிபதி ஏதோ பேசி கொண்டிருந்தார். அட, இந்த சிங்களவர்கள் யாருமே மீசை வைத்து கொள்வதில்லையா? ஒபாமாவுக்கும் தான் மீசை இல்லை. பரவாயில்லை. எல்லா ப்ரொபஸர்களும் தாடி வைத்து கொள்வார்கள் இல்லையா, அது போல உலகில் பெரிய மனிதர்கள் யாருமே மீசை வைத்து கொள்வதில்லை என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

 நாட்கள் செல்ல செல்ல எல்லோருக்கும் எனது புதிய முகம் பழகிவிட்டது. இப்போதெல்லாம் முகத்தை சவரம் செய்யாமல் இருந்தால் தான் நோயாளி மாதிரி இருக்கிறது. ஆகையால் நண்பர்களே, மீசை மேல் ஆசை வைக்காமல் ஓசைப்படாமல் மழித்துவிடுங்கள். உயிரா போச்சு....?



 

Monday, 5 August 2013

ஒரு வார்த்தை

மனித இனத்தின்  எழுச்சியும்  வீழ்ச்சியும் ஒரு வார்த்தையில் தான் அடங்கியிருக்கிறது என்று  நினைக்கிறேன். "அவன் ஒரு வார்த்தை சொல்லிவிட்டான். அது தான் தாங்கி கொள்ள முடியவில்லை". இப்படி எத்தனை பேர் எத்தனை முறை கூறி இருப்பார்கள்? ஒரு வார்த்தையினால் எத்தனை உறவுகள் முறிந்திருக்கும்? எத்தனை மாமன்னர்கள் போருக்கு சென்றிருப்பார்கள்?

காதலன் காதலியின் ஒரு வார்த்தைக்காக ஏங்குகிறான். மனதில் அடிபட்டவன் ஆதரவாக  ஆறுதலான ஒரு வார்த்தைக்கு ஏங்குகிறான். தேர்வு எழுதிய மாணவன் ஆசிரியரின் மதிப்பீடு என்ன என்ற ஒரு வார்த்தைக்காக ஏங்குகிறான். ஆஸ்பத்திரியில் மருத்துவரின் ஒரு வார்த்தைக்காக நோயாளி  ஏங்குகிறான்.  ஜோதிடரிடம்  ஜாதகத்தை கொடுத்த பெண்ணை பெற்றவன் 'பொருந்தியது' என்ற ஒரு வார்த்தைக்காக ஏங்குகிறான். வாழ்க்கையில் இப்படி எல்லாமே ஒரு வார்த்தை தானோ?


நந்தா சக்கரவர்த்தி  அவதூறாக ஒரு வார்த்தை சொல்லி  அவமானப்படுத்தி விட்டான்  என்றதால்  சாணக்கியர் என்ற அந்தணர் சபதம் எடுத்து சந்திரகுப்த மெளரியாவுடன் கை கோர்த்து நந்தா சாம்ராஜ்யத்தையே அழித்து விட்டார். அபிராமி பட்டர் அமாவாசைக்கு பதில் தவறாக பெளர்ணமி என்று ஒரு வார்த்தை கூறியதால் அபிராமி அந்தாதி என்ற அருமையான பொக்கிஷம் பிறந்தது. சிவபெருமானின் தலையை பார்த்ததாக ஒரு வார்த்தை பொய் சொன்னதால் பிரமனுக்கு உலகில் கோவிலே இல்லாமல் போய்  விட்டது.

 பல வருடங்களுக்கு முன் எனது உறவுக்காரன் ஒருவன் (பெயர் வேண்டாமே) பட்ட படிப்பை முடித்து வேலை இல்லாமல் வீட்டில் இருந்த போது அவனது தந்தை சொற்களால் அவனை மிகவும் புண்படுத்தி கொண்டே  வந்தார்.ஒரு கட்டத்தில் 'தண்டச்சோறு" என்று ஒரு வார்த்தை திட்டி விட்டார். அவ்வளவுதான். அவனால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை.
சான்றிதழ்களை எடுத்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விட்டான். கண் போன போக்கிலே கால் போக, கால் போன போக்கிலே மனமும் போக வீதியில் நடந்து கொண்டிருந்த போது அவன் கண்களில் ஒரு மிக பெரிய விளம்பரம் தென்பட்டது.

 'இந்திய இராணுவம் உங்களை அழைக்கிறது' என்ற வாசகத்தை பார்த்து விட்டு உள்ளே சென்றால் இராணுவத்துக்கு ஆள் எடுத்து  கொண்டிருந்தார்கள். உடனே இவன் தனது பெயரை கொடுக்க இவனது சான்றிதழ்களையும் எடை உயரம் இத்யாதிகளையும் பரிசோதித்து உடனடியாக  சேர்த்துக்கொண்டார்கள்.  அடுத்த இரயிலிலேயே நாகாலாந்துக்கு புறப்பட்டான்.

அவனுடைய அம்மா சில நாட்கள் அழுது பிரண்டாள். அவனது தந்தை 'கோபத்தில் மகனை திட்டி விட்டோமே, எங்கு இருக்கிறானோ' என்று பல நாட்கள் மனதுக்குள்ளேயே அழுது கொண்டிருந்தார். இராணுவத்தில் இருந்த அவன் சும்மா இருக்காமல் இராணுவ செலவிலேயே post graduation வரை படித்து விட்டான். வீட்டுக்கு கடித போக்குவரத்து கூட வைத்து கொள்ளாமல்  இருந்தான், பல வருடங்களுக்கு பிறகு  அறிவிப்பு இல்லாமல் திடீரென்று ஒரு நாள் வீட்டுக்கு கிளம்பினான். 'நான் இப்போது தண்டச்சோறு இல்லை அப்பா' என்று தந்தையை பார்த்து கூற வேண்டும் என்று கறுவிக்கொண்டே வந்தான்.

கதவை திறந்த அவனது வயதான தந்தை அவனை பார்த்ததும் சட்டென்று திகைத்து நின்று விட்டார். அவனது தாய் அவனை கட்டி அணைத்துக்கொள்ள தந்தை இப்போது ஒரு வார்த்தை கூட பேச முடியாமல்  கண்ணீர்  விட்டார். அதை பார்த்த இவனது வைராக்கியம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. என்ன இருந்தாலும் தந்தை அல்லவா?  ஒரு பெண் விம்மி அழும் போது வெளி வரும் சோகத்தை விட ஒரு ஆண் மெளனமாக விடும் கண்ணீர் கல்லையும் உருக்க வல்லது. ஒரு வார்த்தை செய்த வினையால் வாழ்க்கையில்தான்  எத்தனை சோகங்கள், எத்தனை மாற்றங்கள்.

மிருகங்களுக்கு இந்த பிரச்னையே இல்லை. அவைகளால் நம்மை போல ஒரு வார்த்தை கூட பேச முடியாது. ஆனால் அவைகளிடம்  பொறாமை,வக்கிரம், வெறுப்பு போன்றவை எதுவும் இல்லை. ஆறறிவு படைத்த மனிதன் ஐந்தறிவு படைத்து மிருகங்களிடம் கற்று கொள்ள வேண்டியது ஏராளம்.

ஒரு வார்த்தை செய்யும் ஜாலங்கள் தான் எத்தனை! 'நன்றி' என்ற வார்த்தையால் பல புதிய நண்பர்கள்  உருவாகிறார்கள்.அந்த ஒரு வார்த்தையை கூறாததால் இருந்த நண்பர்கள் 'நன்றி கெட்டவன்' என்று கூறி விலகுகிறார்கள். செய்த தவறை ஒப்புக்கொண்டு 'மன்னிக்கவும்' என்று ஒரு வார்த்தை கூறி விட்டால் பல பிரிவுகளை தவிர்த்திருக்க முடியுமே. பல விவாகரத்துகள் இல்லாமல் போயிருக்குமே. பேச்சிலும் மூச்சிலும் 'நான்' என்ற வார்த்தையை தவிர்த்து 'நாம்' என்ற வார்த்தையை உபயோக படுத்தினால் அன்பை வளர்க்கலாமே.






Friday, 19 July 2013

அந்த ஏழு மணி நேரம்

ஜூலை 5, 1999. இந்தியாவின் சரித்திரத்தையே புரட்டி போட்ட நாள். இதற்கு சில வாரங்களுக்கு  முந்தைய பின்னூட்டத்தை பார்ப்போம்.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள கார்கில் மலை தொடரில் மிகவும் உயரமான மலை டைகர் ஹில் (Tiger Hill). இந்த டைகர் ஹில் மலையின் உச்சியை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைப்பற்றி விட்டதாக அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் நமது இராணுவத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த டைகர் ஹில் உச்சியில் இருந்து கீழே உள்ள அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும். அது மட்டும் அல்ல, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை குறி வைத்து பாக்கிஸ்தான் இராணுவத்தினர் திடீரென்று சுட ஆரம்பித்து  விட்டனர். 16500 அடி உயரத்தில் உள்ள டைகர் ஹில்லை கைப்பற்றி விட்டதால் ஸ்ரீநகர் மற்றும் வட காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து விட வேண்டும் என்பதே பாகிஸ்தானின் நோக்கம். மலை உச்சியிலிருந்து கீழே சுடுவது மிகவும் எளிது என்பதால் இந்த டைகர் ஹில்லை மீண்டும் கைப்பற்றுவது இந்திய இராணுவத்துக்கு ஒரு மாபெரும் சவாலாக அமைந்து விட்டது.

பகலில் தாக்குதல் நடத்தினால் மிக எளிதாக அந்த தாக்குதலை முறியடித்து விடுவதால் இரவில் எப்படியாவது டைகர் ஹில்லை கைப்பற்றி விட வேண்டும் என்று இந்திய இராணுவம் திட்டம் தீட்டியது. நேரிடையாக தாக்குதல் நடத்தினால் கண்டு பிடித்து விடுவார்கள் என்று மாற்று பாதையை தேர்ந்தெடுத்தனர் மிக மிக கடினமான பாதை இது கிட்டத்தட்ட 90 டிகிரி செங்குத்தாக மலை ஏறி உச்சியை அடைய வேண்டும். அதுவும் அமாவாசை இருட்டில் தாக்குதலை நடத்த வேண்டும் என்பது திட்டம்.

ஜூலை 2ம் தேதி இரவு 25 பேர் கொண்ட ஒரு படையுடன் (battalion) யோகேந்திர சிங் யாதவ் என்ற இளம் இராணுவ வீரர் மலை உச்சியை ஏற ஆரம்பித்தனர். மூன்று நாட்கள் மிக கடினமான மலையை செங்குத்தாக ஏறினர் அந்த உயரத்தில் சாதாரணமாக நடந்து செல்வதே பெரும் சவாலாக இருக்கும். மூச்சு விடவே கடினமாக இருக்கும். 16500 உயரத்தில் பிராண வாயு குறைவாகவே இருக்கும். இருந்தாலும் எதையுமே பொருட்படுத்தாமல் நமது வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரின் கீழ் ஒருவராக மேலே ஏற தொடங்கினார்கள். கிட்டத்தட்ட டைகர் ஹில்லை அடைய 50 மீட்டர் மட்டுமே இருந்த நிலையில்  திடீரென்று ஒரு பாறை காலில் பட்டு கீழே உருள ஆரம்பித்தது.   உஷாராகி விட்ட பாகிஸ்தான் இராணுவத்தினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர், அதனால் 25 பேரில் 18 பேர் மேலே ஏற முடியாமல் பின் வாங்கி விட்டனர். இப்போது எஞ்சி இருந்தது 7 பேர் மட்டுமே.

டைகர் ஹில்லின் மலை உச்சியில் இருந்த பாகிஸ்தான் இராணுவத்தினர் ஏற்கனவே முன் ஏற்பாடாக  40 மீட்டர் கீழே ஒரு சிறிய 'பங்க்கரை' (bunker) அமைத்திருந்தனர். ஒரு வேளை கீழே இருந்து யாராவது தாக்குதல் நடத்தினால் முதலில் பங்க்கரில் இருக்கும் இராணுவத்தினர் பதிலடி கொடுப்பார்கள். அதற்கு பிறகே மேலே வர முடியும். எப்படி அவர்களது திட்டம் பாருங்கள்.

மேலே ஏறிக்கொண்டிருந்த 7 இராணுவ வீரர்களுக்கு இந்த பங்க்கரை  தகர்க்க வேண்டிய கட்டாயம். அப்போது தான் மலை உச்சியை அடைய முடியும். சரியான நேரம் பார்த்து பங்க்கரை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். எதிர்பாராத அந்த தாக்குதலில் 4 பாகிஸ்தான் இராணுவத்தினர் இறந்தனர். அதற்குள் டைகர் ஹில்லின் உச்சியில் 135 பாகிஸ்தான் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

பங்க்கரை  இந்திய வீரர்கள் கைப்பற்றிய உடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய மலை உச்சியிலிருந்து ஒரு 10 பாகிஸ்தானியர்கள் மெல்ல இறங்கி வந்தனர். கொஞ்சம் யோசித்து பாருங்கள். பங்கருக்கும் டைகர் ஹில் உச்சிக்கும் வெறும் 40 மீட்டர் தூரம் தான். அவர்கள் 135 பேர். இவர்கள் வெறும் 7 பேர் மட்டுமே.பாகிஸ்தானியர்கள் கண்டிப்பாக   வருவார்கள் என்பதை எதிர்பார்த்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் சரமாரியாக அவர்களை நோக்கி சுட ஆரம்பித்ததில் 8 பேர் இறந்தனர். மீதி இரண்டு பேர் பின்னோக்கி சென்று மொத்தமாகவே 7 பேர் தான் இருக்கிறார்கள் என்று மலை உச்சியில் இருக்கும் தமது படைகளுக்கு கூறி விட்டனர்.

அவ்வளவுதான்.  உச்சியில் இருந்து ஒரு 100 பேர் கீழே இறங்கி வந்து சரமாரியாக சுட ஆரம்பித்தனர். கடுமையான சண்டையில் 35 பாகிஸ்தான் இராணுவத்தினர் இறந்தனர். இந்திய வீரர்களில் யோகேந்திர சிங் யாதவ் மட்டும் படு காயமுற்றார் மீதி இருந்த 6 பேரும் இறந்து விட்டனர். இவர் ஒருவர் மட்டும் தனி ஆளாக இருந்தார். கைகள், கால்கள், தொடைகள் என்று உடம்பு முழுவதும் 15 இடங்களில் குண்டடி பட்டு மயக்கமடைந்து விட்டார்.

அனைவரும் இறந்து விட்டனர் என்று நினைத்து பாக் இராணுவத்தினர் ஆயுதங்களை எடுத்து கொண்டு புறப்பட்டனர் போகும்போது இறந்தவர்களின் உடல்களின் மீது சரமாரியாக சுட்டு விட்டு சென்றனர். என்ன ஒரு வெறி பாருங்கள். மயக்கத்தில் இருந்த யாதவுக்கு மெல்ல நினைவு திரும்ப ஆரம்பித்தது. ஒரு கணத்தில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். இறந்த உடல்களில் இருந்து ஆயுதங்களை எடுத்து கொண்டு சென்ற பாக் இராணுவத்தினர் யாதவின் சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்களில் இருந்த எறி குண்டுகளை (grenades) மறந்து விட்டனர். கடைசியாக திரும்பி சென்று கொண்டிருந்த பாக் இராணுவ வீரன் தனது தொப்பியை பின்புறமாக தொங்க விட்டு சென்று கொண்டிருந்தான்.

அவ்வளவு தான். ஒரே நொடியில் யாதவ் தன பாக்கெட்டில் இருந்த கை எறி குண்டை அவன் மேல் எறிந்தார். அவனது உடல் சுக்கு நூறாக வெடித்து விண்ணில் பறந்தது. பக்கத்தில் இறந்து கிடந்த பாகிஸ்தானியின் கையில் இருந்த துப்பாக்கியை அள்ளி கொண்டு உருண்டு கொண்டே சரமாரியாக சுட ஆரம்பித்ததில் 5 பாகிஸ்தானி இராணுவத்தினர் இறந்தனர். இப்போது பாக் இராணுவத்தினர் மத்தியில் பயங்கர குழப்பம். நாலா  பக்கத்திலிருந்தும் சரமாரியாக சுட்டதால் புகை மண்டலத்தில் இந்தியர்கள் அந்த இடத்தை கைப்பற்றி விட்டனர் என்றே  நினைத்து விட்டனர். ஒரே ஆள் இத்தனை பேரை சுட்டு வீழ்த்துவான் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. குழப்பத்தில் சிதறி போன பாக் இராணுவத்தினரின் வயர்லெஸ் பெட்டியில் உடனடடியாக டைகர் ஹில்லில் இருந்து அனைவரும் 500 மீட்டர் கீழே இருக்கும் இந்திய இராணுவத்தின் எம்.எம்.ஜி. பேஸை (MMG Base) கை பற்றுமாறு உத்தரவு வந்ததை யாதவ் கேட்டு விட்டார்.

எம்.எம்.ஜி. பேஸை பாக் கைபற்றி விட்டால் ஸ்ரீநகர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்க பட்டுவிடும். அதன் பின் மிக எளிதாக பாக் காஷ்மீரை கைபற்றி விட முடியும்.

வயர்லெசில் இதை கேட்ட யாதவால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. கை வேறு உடைந்து விட்டது. உடம்பு முழுவதும் குண்டடி பட்ட காயங்கள். எப்படியாவது எம்.எம்.ஜி.பேஸை காப்பாற்ற வேண்டும் என்று தன உடலை உருட்டிக்கொண்டே  மேலிருந்து உருண்டு உருண்டு 500 மீட்டர் தூரம் கீழே உள்ள எம்.எம்.ஜி.பேஸை ஒரு வழியாக வந்தடைந்தார். பாறைகளில் அடிபட்டு ஏற்கனவே குண்டடிபட்ட உடம்பு ரண களமாகி  விட்டது.

உருண்டு வந்த யாதவை அவரது மேலதிகாரி லெப்டினன்ட் பல்வான் பார்த்து விட்டார். தனது மடியில் அவரை தாங்கி கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்டபோது யாதவ் தட்டு தடுமாறி "எம்.எம்.ஜி.பேசி பாக் இராணுவத்தினர் தாக்க போகிறார்கள்" என்று கூறிவிட்டு மயக்கமடைந்து விட்டார். உடம்பில் இருந்து நிறைய இரத்தம் வெளியேறி விட்டிருந்தது.

மிக முக்கியமான இந்த தகவலை அறிந்து கொண்ட இராணுவத்தினர் தயாராக காத்திருந்தனர்.  இந்திய விமானப்படைக்கும் இரகசிய தகவல் கொடுத்தனர். எதிர்பார்த்தது போல பாக் இராணுவத்தினர் தாக்கும் போது அவர்களுக்காக காத்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்ததில் பாக் இராணுவத்தினர் அனைவரும் இறந்தனர். அதே சமயம் இந்திய விமானங்கள் சரமாரியாக டைகர் ஹில் உச்சி மீது குண்டு மழை பொழிந்தது. எஞ்சி இருந்த பாக் இராணுவத்தினர் மாண்டனர். 7 மணி நேரத்தில்  டைகர் ஹில் மீண்டும் இந்தியாவின் வசமானது.

Major Dhan Singh Thapa

தனது உயிரையும் துச்சமாக மதித்து நமது நாட்டை காப்பாற்றிய யாதவுக்கு இந்திய அரசு மிக உயர்ந்த இராணுவ மரியாதையான பரம் வீர் சக்கராவை அளித்து கெளரவித்தது. இப்போது அதை நினைவு கூறும் யாதவ், "தாய் நாட்டுக்காக எங்களது உயிர் பிரிந்தால் அதை விட பெருமை வேறு  ஒன்றுமே இல்லை. என்னுடைய சகோதரர்களை விட பிரியமான  இறந்து போன அந்த ஆறு சக வீரர்களின் தியாகத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது" என்று அடக்கமாக கூறுகிறார்



நண்பர்களே, நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களை வருத்தி கொண்டு உயிரையும் மாய்த்துக்கொண்டு நமது இராணுவத்தினர் எல்லையில் குளிரிலும் வெயிலிலும் பாதுகாத்து கொண்டிருக்கின்றனர். நாம் கடவுளிடம் வேண்டும் பொழுது அவர்களின் நலனுக்காகவும் சிறிது வேண்டி கொள்ளுங்களேன். இன்று நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என்றால் கண்டிப்பாக இது போன்ற தியாக வீரர்களால்  தான் இல்லையா?

Indian Army buglers during the inauguration of a war memorial in Drass, 160 km east of Srinagar

Wednesday, 12 June 2013

தந்திக்கு அஞ்சலி

"கடங்காரா ,  நீ  நாசமா போக" என்று எனது பாட்டி தபால் காரனை வசை பாடியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது எனது தூரத்து உறவினர் இறந்து விட்டார். அந்த மரண செய்தியை தந்தி மூலமாக கொடுத்த தபால்காரனுக்கு தான் இந்த வசவு. இதே தபால்காரன் மணி ஆர்டர் கொண்டு வந்து கொடுக்கும்போது அவனுக்கு பாட்டி பணம் கொடுத்து அனுப்பியதும் நினைவுக்கு வருகிறது.

பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்பது போல கெட்ட செய்தியை கொண்டு வந்து கொடுத்த தந்திக்காரன் என்ன செய்வான்? ஆனால் அப்போதைய கால கட்டத்தில் தொலைபேசி கைபேசி, மின் அஞ்சல் என்று எதுவுமே கிடையாது. யார் வீட்டுக்காவது தந்தி வந்தால் அது கேட்ட செய்தியாக தான் இருக்கும் என்று எழுதப்படாத சட்டம் இருந்தது. தந்திக்காரன் வருகிறான்  எல்லோரும் அலறுவார்கள். அவன் வீட்டை கடந்து செல்லும்போது "அப்பாடா, நம் வீட்டுக்கு இல்லை என்று ஒரு  பெருமூச்சு விடுவார்கள். அதே  சமயம் யார் வீட்டுக்கு போகிறான் என்று ஜன்னல் வழியாக எட்டி  பார்த்து விட்டு "ஐயோ பாவம்" என்று உச்சு கொட்டுவார்கள்.

ஒரு முறை ஆதித்தனார் கடலூரில் டாக்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு "தந்தி ஆபிஸுக்கு போ" என்று ஓட்டுனரிடம் கூறிவிட்டு அசதியில் தூங்கி விட்டாராம். வண்டி நின்றவுடன் திடுக்கிட்டு எழுந்திருந்து வெளியே பார்த்தால் தினத்தந்தி அலுவலகத்துக்கு பதிலாக அவன் மத்திய தந்தி அலுவலகத்தின் எதிரில் போய்  நிறுத்தியிருந்தானாம்.  அப்போது தான் கடலூரில் தினத்தந்தி பிரதியை ஆரம்பிக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாம். "தந்தி" என்றாலே "தினத்தந்தி தான் மக்கள்  நிற்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.

1995ம் ஆண்டில் புதிய பம்பாய் நெருல் பகுதியில் வசித்து வந்தேன். எனது பக்கத்து வீட்டில் வயதான  இருவர் இருந்தனர் அவருடைய ஒரே மகளுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. மருமகன் இந்திய ராணுவத்தில் கேப்டனாக வேலை செய்து வந்தார். வடமேற்கு பகுதியில் சீன எல்லை  அருகே எங்கோ ஒரு இடத்தில் அவர் தனது மனைவி குழந்தையுடன் இருந்தார். அப்போதெல்லாம் தொலைபேசி வசதி அவ்வளவாக இல்லை. எங்கு  பார்த்தாலும் மஞ்சள் நிறத்தில் STD பூத்கள் தான் இருந்தன. இராணுவ விதிகளின்  படி எல்லையில் வேலை செய்பவர்கள் தான் எங்கே இருக்கிறோம்  என்பதை யாருக்கும்  தெரியப்படுத்த கூடாது. அதனால் தனது  மகளும் மருமகனும் எங்கே இருக்கிறார்கள் என்பதே இந்த தாத்தா பாட்டிக்கு தெரியாது. இவர்கள் போனில் பேசினால் முதலில் அது இராணுவ exchangeக்கு சென்று அங்கு இருப்பவர்கள் சரியான இடத்துக்கு connection போட்டு கொடுப்பார்கள் அனைத்து உரையாடல்களும் ஒட்டு கேட்கப்படும்.

தாத்தா என்னிடம் ஒரு  முறை "உனக்கு BSNLல் யாரையாவது தெரியுமாப்பா? வீட்டில் ஒரு phone கூட இல்லை. என் பெண்ணிடம் பேச வேண்டும் என்றால் எஸ்.டிடி பூத் வரை செல்ல வேண்டி இருக்கிறது. என்னால் முடியவில்லை" என்று கூறினார்.  அப்படி கூறும்போதே அவரின் ஏக்கம் மனதை பிசைந்தது. ஒரு தொலைபேசி இணைப்பு பெறுவது அவ்வளவு கடினமாக இருந்த காலம்  அது. அவருடைய மனம் நோகக்கூடாது என்பதற்க்காக நானும் "தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன்" என்று கூறினேன். தனிமை மிகவும் கொடிது அதுவும் முதுமையில் தனிமை மிக மிக கொடிது. 

பல நாட்கள் தாத்தா பாட்டி தனது மகள் எப்போது கூப்பிடுவாள் என்று     
ஏங்கிக்கொண்டிருப்பார்கள். அப்படி அந்த மகள் கூப்பிடும்போது குழந்தை போல அவர்களின் மனம் குதூகலித்து விடும்.

ஒரு  நாள் திடீரென்று தாத்தாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு விட்டது. அவர்களுக்கு உதவி செய்ய அருகில் யாருமே இல்லை. நான் வேலைக்கு சென்றிருந்தேன். எனது மனைவியும் பாட்டியும் தாத்தாவை ஒரு ஆட்டோவில் உட்கார வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். வழி முழுவதும் தாத்தா மூச்சு விட மிகவுமே திணறிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரொம்பவுமே முடியாமல் எனது மனைவி மீது சாய்ந்து விட்டார். அதற்குள் மருத்துவமனை வந்துவிட்டது. மாடியில் உள்ள  மருத்துவமனைக்கு தாத்தாவை எப்படி அழைத்து செல்வது?  எப்படியோ எனது மனைவியும் ஆட்டோக்காரரும் கஷ்டப்பட்டு அவரை தூக்கி மாடிப்படியில் ஏறி தாத்தாவை அங்கு உள்ள பெஞ்சில் படுக்க வைத்தனர். அவரை வந்து பரிசோதித்த மருத்துவர் அவர் சற்று முன் இறந்து விட்டார் என்று கூறினார். பாட்டியை சமாதான படுத்தவே முடியவில்லை.

மாலையில் நான் வீட்டுக்கு வந்த போது நடந்ததை மனைவி கூறினார். நான் பாட்டியை தேற்றி விட்டு உறவினர்களின் முகவரிகளை ஒரு டைரியில் எழுதிக்கொண்டேன். அவசரம் அவசரமாக தந்தி அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது தான் அவர்கள் தபால் அலுவலகத்தை மூடி கொண்டிருந்தார்கள். "இது மிகவும் சிறிய அலுவலகம். நீங்கள் வாஷி தந்தி அலுவலகத்துக்கு செல்லுங்கள் அவர்கள் 24 மணி நேரமும் திறந்திருப்பார்கள்" என்று கூறினார்கள். நான், "சார், இது மிகவும் அவசரம். ஒருவர் இறந்து விட்டார். அவருடைய மகளுக்கு முதலில் தந்தி கொடுக்க வேண்டும். மற்ற உறவினர்களுக்கும் கொடுக்க வேண்டும்" என்றேன் 

நம்பினால் நம்புங்கள், நான் அப்படி கூறியவுடன் பூட்டி கொண்டிருந்த கதவை அவர் திறந்து கத்தையாக சில தாள்களை (forms) என் கையில் திணித்தார். "சார், இந்த  தாள்களில் நீங்கள் முகவரிகளை மட்டும் எழுதி தாருங்கள். நான் இவை அனைத்திலும் அதே செய்தியை அடித்து வாஷி அலுவுலகத்தில் கொடுத்து விடுகிறேன்" என்றார். 5 மணி ஆனால் ஒரு நிமிடம் கூட வேலை செய்யாத அரசாங்க அலுவலர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மா மனிதர். மனித நேயம் இன்னும் சாகவில்லை. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான். தாத்தா, உண்மையிலேயே நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். 


சில வருடங்களில் இந்த தந்தி வெறும் அசுப செய்திகளுக்காக மட்டும் என்ற நிலை சிறிது சிறிதாக மாறியது. முதன் முதலில் வானொலியில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு அழைப்பு தந்தி மூலமாக வந்தது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சி அலாதியானது என்றே கூறலாம். எனக்கு செளதியில் வேலைக்கான இண்டர்வியூ விஷயத்தை ஏஜெண்ட் தந்தி மூலமாக தான் தெரிவித்தான். 

ஒரு கட்சியில் தலைவர் அடிக்கடி தனது தொண்டர்களுக்கு "டெல்லிக்கு தந்தி அனுப்புங்கள்" என்று கூறுவார். பிரதமர் அலுவலகத்தில் அப்படி வந்து சேரும் தந்திகளை அவர் பார்ப்பாரா என்பது வேறு விஷயம் எதோ தந்தி அலுவலகத்துக்கு இதனால் சிறிது லாபம் வந்தால் சரி தான். Post and Telegraph (P&T) என்று காலா காலமாக நமக்கு தெரிந்த தபால் நிலையங்களை திடீரென்று Department of Posts என்று மாற்றி விட்டார்கள். Morse Codeல் அடித்து அனுப்பிய தந்தியின் காலம் போய்  கணினியிலேயே அடிக்க ஆரம்பித்தார்கள்.

காலத்தின் வெள்ளத்தில் தந்தி மெல்ல சாக ஆரம்பித்தது. தந்தியை விடுங்கள் இப்போதெல்லாம் யாரும் கடிதமே எழுதுவதில்லை என்றே  சொல்லலாம். அது தான் எதற்கெடுத்தாலும் கைப்பேசி மூலமாகவோ மின் அஞ்சல் மூலமாகவோ விஷயத்தை கூறி விடுகிறார்களே. தந்தி போல இனி "சார் போஸ்ட்" என்ற குரலை கேட்க முடியுமா என்றும் தெரியவில்லை 

Telex மாதிரி இப்போது தந்திக்கும் மூடுவிழா சொல்லி விட்டது நமது தபால் துறை. அடுத்த தலைமுறைக்கு தந்தி என்றால் என்ன என்பதை விளக்குவதே கடினமாக இருக்கும். ஜூரம் வரும்போது பற்கள் தந்தி அடிக்கின்றன என்று இனிமேல் கூற முடியாது. தந்திக்கம்பி என்றால் என்ன என்று இன்றைய தலைமுறையினரே கேட்கிறார்கள்.  தந்தி இறந்து விட்டது என்று இனி யாரிடம் தந்தி அடிப்பது? 





Saturday, 8 June 2013

சலாம் பம்பாய்-5

வந்தோரை வாழ வைக்கும் ஊர் பம்பாய் என்றால் அது மிகையாகாது. (வந்தது தான் வந்தீர்கள் எனது முந்தைய பம்பாய் பதிவுகளையும் படித்து விட்டு செல்லுங்களேன். இங்கே 'க்ளிக்' செய்யுங்கள் -சலாம் பம்பாய் - 1, 2, 3, 4).

1998ம்  வருடம் திருமணத்துக்கு முன்பு பம்பாய் மாதுங்காவில் இருந்த போது கிடைத்த நண்பர்களை மறக்கவே முடியாது. இந்தியன் ஜிம்கானாவுக்கு எதிரே உள்ள வீட்டில் ஒரு அறையில் தங்கி இருந்தேன். மாத வாடகை 400 ரூபாய். அந்த அறையின் மூலையில் ஒரு சிறிய தொட்டியும் ஒரு குழாயும் இருந்தது. அதில் தான் குளியல் எல்லாம். மற்ற அறைகளில் ஒரு மராத்தி குடும்பம் இருந்தது. பம்பாயில் பிழைக்க வரும் என்னை போன்றவர்களுக்கு இது போல தங்க இடம் கிடைப்பதே அரிது. ஒரு இரண்டு பில்டிங் தள்ளி எனது நண்பன் சந்தானம் மற்றொரு அறையில் தங்கி இருந்தான். "அறை" என்றால் என்னை போன்ற  தனி ரூம் எல்லாம் இல்லை. எதிர்நீச்சல் படத்தில் நாகேஷ் தங்கி இருப்பாரே அது போல மாடிப்படியின் கீழே உள்ள இடத்தில் (landing) தங்கி இருந்தான். அவனுக்கு மாத வாடகை 60 ரூபாய். அவனுடைய வீட்டுக்காரர் ஒரு தமிழர்.

ஒரு முறை சந்தானம் அவனுடைய வீட்டுக்காரரிடம் "சார் ஒரே மூட்டை பூச்சி தொல்லையாய் இருக்கு. சத்தம் வேற தாங்கல." என்று புகாரை அடுக்கி கொண்டே  போனான். வெறுப்படைந்த வீட்டுக்காரர், "நீ கொடுக்கும் 60 ரூபாய் வாடகைக்கு ஹேமமாலினி வந்து டான்ஸ் ஆடுவாளா? போயா" என்று திட்டி விட்டார்!

மாதுங்காவில் Concerns என்று ஒரு இடம். மாடியில் வாழை இலையில் சாப்பாடு போடுவார்கள். மலை போல சாதத்தை இலையில் போட்டு அதன்  நடுவில் குழி செய்து அதில் நெய்யை ஊற்றி சாம்பாருடன் கலந்து உள்ளே தள்ளும்போது, ஆஹா, சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொறு வியாழன்  அன்றும் வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு கறி என்று அட்டகாசமாக இருக்கும்.  Concerns தான் நண்பர்களுடைய ஆஸ்தான சந்திக்கும் இடம். எங்களை போன்று பம்பாய்க்கு பிழைக்க வரும் bachelorகளுக்கு அது ஒரு சொர்க்க பூமியாகவே இருந்தது. குடும்பத்தினரை விட்டு தனியாக இருக்கும் கஷ்டத்தை அனுபவித்தால் தான் புரியும். அங்கு கிடைத்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் அனைவரும் மனம் விட்டு பேசிக்கொள்வதில் கவலைகள் எல்லாம் பறந்து போய்விடும்.

ஒரு முறை Concernsல்  ஆறு ரூபாயிலிருந்து எட்டு ரூபாயாக சாப்பாட்டு விலையை  திடீரென்று உயர்த்தி விட்டார்கள். அவர்களிடம் போய் கேட்டதற்கு "நாங்கள் அப்படி தான் உயர்த்துவோம். சாப்பாடு வேண்டும் என்றால் 8 ரூபாய் கொடுத்து சாப்பிடு இல்லையென்றால் இடத்தை காலி பண்ணு" என்று கத்திவிட்டார்கள். சுதாகர் என்ற நண்பனுக்கு இது ஒரு தன்மான பிரச்னையாகி விட்டது. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை "டேய், இவனை சும்மா விடக்கூடாது டா, ஒரு நல்ல பாடம் புகட்டணும்" என்று கறுவினான்.

மறுநாள் மாலை மாடிப்படி வாசலை மறித்து கொண்டு வருவோரை எல்லாம் திரும்பி அனுப்பி கொண்டிருந்தான். "இங்கே சாப்பிடாதீர்கள் விலை ஏற்றி விட்டான்" என்று கத்திக்கொண்டே எல்லோரையும் திரும்ப போக செய்தான். Concernsன் சொந்தக்காரர், யாருமே சாப்பிட வரவில்லையே, என்ன விஷயம் என்று விசாரிக்க கீழே இறங்கி வந்து பார்த்தார். அங்கு திரண்டிருந்த பெரிய கூட்டத்தை இவன் ஒருவன் மட்டும் திரும்ப அனுப்பி கொண்டிருந்ததை பார்த்து அவருக்கு மயக்கம் வராத குறைதான். "தம்பி விலைவாசி எல்லாம் ஏறி விட்டது. 6 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு எனக்கு கட்டுபடி ஆகவில்லை" என்று கூறினார். நாங்கள் இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய  ஆரம்பித்தது. அவர் கையை பிசைய ஆரம்பித்த உடன் எங்களுக்கே பாவமாகி விட்டது. "விடுடா பாவம், வியாபாரத்தை கெடுக்காதே" என்று நாங்கள் சுதாகரை இழுத்து கொண்டு வெளியே  சென்றோம். "இதை இவர் நேற்றே என்னை விரட்டாமல் கூறி இருக்கலாமே" என்றான். அன்று ஒரு நாள் மட்டும் Concernsக்கு சரியான நஷ்டம். இதுவும் ஒரு அனுபவம்!

சில நாட்களுக்கு பிறகு பார்வதி நிவாஸில் இருந்து மாதுங்கவின் அருகில் உள்ள ஸிஜிஎஸ் காலனிக்கு அறையை மாற்றி விட்டேன்.  நான் ஒருவனே 400 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக இருவர் ஒரு அறையில் தங்கி இருந்தால் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்தாலும் லாபம் தானே. 2000 ரூபாய் சம்பளத்தில் இருந்த எனக்கு ஒவ்வொறு ரூபாயின் சேமிப்பும்  மிகவும் முக்கியமாக இருந்தது. சுப்ரமணியன் என்ற நண்பனுடன் நான் அறையை பகிர்ந்து கொண்டேன். அவன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுடன் அடித்த கூத்துக்கு அளவே இல்லை.

மாதுங்கா இரயில் நிலையத்தை விட்டு வெளியெ வந்தால் உடனேயே இடது பக்கத்தில் உள்ள கட்டிடத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் இருக்கும். அதற்கு நாங்கள் வைத்த பெயர் 'பெரிய உடுப்பி'. அளவு சாப்பாடு தான் கொடுப்பார்கள் ஆனால் பிரமாதமாக இருக்கும். சிறிது தூரம் நடந்து வலது பக்கம் திரும்பினால் மற்றொரு உடுப்பி ஹோட்டல் இருக்கும். இது 'சின்ன உடுப்பி'. உடம்பு சரி இல்லை என்றால் இங்கு வந்து மிளகு ரசம் சாதம் சாப்பிடுவோம். பெரிய உடுப்பியில் அளவு சாப்பாடு 8 ரூபாய். Full Meals 16 ரூபாய். Full Meals வாங்கினால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

சனிக்கிழமை இரவு சீக்கிரமே சாப்பிட்டு விடுவோம் அதுவும் இரண்டு இட்லி அல்லது போண்டா அவ்வளவு தான். மறுநாள் காலை ஒரு டீ குடித்து விட்டு  வேறு எதுவுமே  சாப்பிட மாட்டோம். கபகப என்று பயங்கரமாக பசிக்கும். ஒரு 12 மணி வாக்கில் சிஜி.எஸ் காலனியில் இருந்து நண்பர்கள் கூட்டத்துடன் பெரிய உடுப்பிக்கு நடந்து வந்து Full Meals ஒரு கட்டு கட்டுவோம் பாருங்கள். அவனவன் 10 பூரி, 5 அப்பளம் என்று சகட்டு மேனிக்கு உள்ளே  தள்ளுவான். உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு அல்லவா? அதனால் திரும்பி போகும் போது Share taxi எடுத்து கொண்டு அறைக்கு சென்று செம தூக்கம் ஒன்று போடுவோம். எல்லாம் ஒரு ஜாலி தான்.

ஒரு முறை மாதுங்கா கிங் சர்க்கிளில் உள்ள அரோரா தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் போட்டார்கள். நானும் சுப்ரமணியனும் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றால் House Full போர்டு போட்டு விட்டார்கள். எங்களுக்கு ஒரே ஏமாற்றம். சுப்பு விடுவதாக இல்லை. "கொஞ்சம் இரு வருகிறேன்" என்று எங்கோ சென்றான். சரி, blackல் வாங்க போகிறான் போல இருக்கிறது என்று நினைத்து கொண்டேன். அரோரா என்பது ஒரு மட்டமான தியேட்டர். இருக்கைகள் உடைந்து நாற்றம் எடுக்கும். ஆனால் தமிழ் படங்களை எப்போதும் போடுவார்கள். ஏண்டா இங்கு வந்து மாட்டிக்கொண்டோம் என்று நினைத்து கொண்டிருக்கையிலேயே சுப்பு வந்தான். ஆனால் கைகளில் டிக்கட் இல்லை. கூட தடி மாடு மாதிரி வேரு ஒருவான் வந்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் கையை இழுத்து கொண்டு, "வா, எதுவும் பேசாதே" என்று அழைத்து சென்றான். கூட வந்தவன் டிக்கட் வாங்குபவனிடம் எதோ காதில் கிசுகிசுத்தவுடன் எங்களிடம் டிக்கட் எதுவும் வாங்காமல் "K வரிசையில் 15, 16 ஆகிய இருக்கைகளில் போய் உட்காருங்கள்" என்றான். உள்ளே சென்றால் எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கே மற்றும் அதன் பின்னே இருந்த எல் வரிசைகளில் ஒரு ஆள் கூட இல்லை. மற்ற அனைத்து வரிசைகளிலும் சரியான கூட்டம்.

படம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்த போது விளம்பரங்களை போட்டார்கள். "ஆரோக்ய வாழ்வினையை காப்பது லைப்பாய்......." என்று திரையில் பாடல் வந்தவுடன் விளக்கை அணைத்து விட்டார்கள். திடீரென்று ஒரு 20 அல்லது 25 பெண்கள் திபுதிபுவென்று உள்ளெ நுழைந்து காலியாக இருந்த இந்த இரண்டு வரிசைகலிலும் உட்கார்ந்து கொண்டார்கள். நானும் சுப்ரமணியனும் நடுவில் இருந்தோம் இரண்டு பக்கத்திலும் மற்றும் பின்புறம் உள்ள வரிசை  முழுவதிலும் அவர்கள் உட்கார்ந்திருந்து கொண்டார்கள். இருட்டியிருந்ததால் சரியாக கவனிக்க முடியவில்லை. நானும் எதோ  block booking செய்திருப்பார்கள் என்று நினைத்தேன்.

படம் ஆரம்பித்தது. விசில் சத்தம் விண்ணை பிளந்தது. எம்.ஜிஆர் படத்தில் விசில் சத்தம் கேட்பது அதிசயம் இல்லை ஆனால் இந்த முறை விசில் அடித்தது எனக்கு அருகில் இருந்தவள் !  முதல் காட்சி ஆரம்பித்த உடனேயே வாயில் வெற்றிலையை குதுப்பி கைகளை பட் பட் என்று பலமாக அடித்தாள். நான் அதிர்ச்சியில் அவளை கூர்ந்து பார்த்தேன். அப்போது தான் தெரிந்தது அவள் ஒரு அரவாணி என்று. 

நான் சுதாரித்து கொள்வதற்குள் எனது பின் இருக்கையில் இருந்தவள் தனது இரண்டு கால்களையும் தூக்கி முன்னாள் உட்கார்ந்திருக்கும் எனது இருக்கையில் தலையின் இரு புறமும் படீரென்று வைத்தாள். நான் திடுக்கிட்டு திரும்பி பார்த்தால் அவளும் ஒரு அரவாணி தான். இதற்குள் எனது நண்பன் அருகில் இருந்தவள் கரகரப்பான ஆண் குரலில் எதோ அருகில் இருந்தவளிடம் கூறினாள் பார்த்தால் அவளும் ஒரு அரவாணி. அது மட்டும் அல்ல. காலியாக இருந்த அந்த இரண்டு வரிசைகள் முழுவதும் இவர்களே! 

நான் சுப்ரமணியனின் கைகளை பற்றி இழுத்து கொண்டு அவசரம் அவசரமாக வெளியே ஓடினேன். பின் பக்கம் அமர்ந்திருந்த அத்தனை அலிகளும் எங்களை சிறப்பான சென்னை செந்தமிழில் வசைமாரி பொழிந்தார்கள். கதவில் நின்று கொண்டிருந்த அந்த டிக்கட் செக்கரை நான் பிடித்து கன்னா பின்னாவென்று கத்தினேன். அவன் அதற்கு நிதானமாக "இந்த படத்தின் டிக்கட் எல்லாமே விற்று தீர்ந்து விட்டன நாங்கள் எப்போதுமே இந்த இரண்டு வரிசைகளை காலியாக வைத்திருப்போம். இதில் அரவாணிகள் எப்போது வந்தாலும் காசு வாங்காமல் உள்ளே  வந்து படம் பார்க்க அனுமதிப்போம் அப்படி நாங்கள் அனுமதிக்கவில்லை என்றால் அவர்கள் மற்ற வரிசைகளில் உட்கார்ந்து கொண்டு கலாட்டா செய்வார்கள். அதனால் இவர்களுக்காக இந்த இரண்டு வரிசைகளை கொடுத்து விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் அல்லவா?" என்றான். அடப்பாவி, அதனால் தான் இந்த இரண்டு வரிசைகளும் காலியாக இருந்ததா? 

அன்று எடுத்த ஓட்டம் தான். அதற்கு பிறகு பம்பாயில் சினிமா பார்க்கும் ஆசையே போய் விட்டது!

கால சக்கரத்தின் சுழலில் ஒவ்வொறு நண்பனும் ஒரு திசையாக பிரிந்து விட்டோம். சுப்பிரமணியன் மஸ்கட் சென்று விட்டான் இரண்டு முறை கடிதம் எழுதினான் அதற்கு பிறகு நின்று விட்டது. இதே போல மற்றவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்றாவது ஒரு நாள் எங்காவது இவர்களில் யாரையாவது சந்திப்பேனா என்று தெரியவில்லை. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். காற்றில் திடீரென்று மிதந்து வரும் மல்லிகை மணம் போல எங்கிருந்தோ வந்தோம், நண்பர்கள் ஆனோம், எங்கோ பிரிந்து சென்று விட்டோம். ஆனால் அந்த நட்பின் நினைவுகள் மட்டும் எப்போதும் பசுமையாக இருக்கிறது. 


Tuesday, 7 May 2013

ஒளியும் ஒலியும்

சமீபத்தில் குடும்பத்துடன் ஒரு எலெக்ட்ரானிக் கடைக்கு சென்றிருந்த போது கடையின் வாசலில் ஒரு மிக பெரிய 65 அங்குல 3D LED தொலைக்காட்சி பெட்டியை காண நேர்ந்தது. பார்க்கவே சினிமா தியேட்டரின் திரை போல இருந்தது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அதை வாங்குவதற்கு கூட மக்கள் இருக்கிறார்கள் என்பது தான். பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் இந்த நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்களே, அவர்களுக்காகவே இது போன்ற விஷயங்கள் சந்தைக்கு வருகின்றன என்றே நினைக்கிறேன். அந்த தொலைக்காட்சி பெட்டியை சுற்றி திருவிழா போல ஒரு கூட்டமே கூடி இருந்தது. அந்த காட்சி எனது நினைவலைகளை பின்னோக்கி கூட்டி சென்றது.
 
 
 நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியே கிடையாது. ஒரு பழைய பிபிப்ஸ் வானொலி பெட்டி தான் இருந்தது. அதை  ON செய்தவுடனேயே பாட ஆரம்பிக்காது. ON செய்து சில நிமிடங்களுக்கு பிறகு இடது பக்கத்தில் பச்சை நிறத்தில் மேலிருந்து கீழாக இரண்டு கோடுகள் தெரியும். அந்த இரண்டு கோடுகளையும் நாம் ஒன்று சேர்த்தால் தான் சரியாக கேட்கும். பல வருடங்கள் இதை பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஒவ்வொறு ஞாயிறன்றும் மதியம் 3 மணிக்கு 'ஒலிச்சித்திரம்' என்ற நிகழ்ச்சியை போடுவார்கள். ஏதாவது ஒரு திரைப்படத்தை ஒரு மணி நேரமாக சுருக்கி ஒலிபரப்புவார்கள். நாங்கள் (அண்ணன், சகோதரிகள்) எல்லோரும் வானொலியை சுற்றி உட்கார்ந்து கொண்டு சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்போம். ஞாயிறன்று எங்களது தந்தை மதியம் சிறிது நேரம் தூங்குவார். அந்த நேரம் பார்த்து தான் நாங்கள் எல்லோரும் இதை கேட்போம். மற்ற நேரங்களில் எங்களுக்கு வானொலியை கேட்க அனுமதி இல்லை. அதனாலேயே நாங்கள் ஞாயிறு எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருப்போம்.
 
ஒரு கால கட்டத்தில் இலங்கை வானொலி மிகவும் பிரபலமாகி விட்டது. அதுவும் கே.எஸ்.ராஜா போன்றவர்களின் கம்பீர குரலை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. காலை 7.15 மணிக்கு  செய்திகள் மிக பிரபலமாக இருந்தது. "ஆகாஷவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி" என்று அவர் கூடவே நாங்களும் சேர்ந்து சொல்வோம். அதே போல தினமும் இரவு ஒன்பது மணி செய்திகளை எனது தந்தை தவறாமல் கேட்பார். இடியோ, மழையோ, வெள்ளமோ, பூகம்பமோ எதுவாக இருந்தாலும் செய்திகளின் முதல் வரி மட்டும் "The Prime Minister Mrs. Indira Gandhi..... " என்று ஆரம்பிக்கும். இது ஏன் என்று எனது தந்தையிடம் ஒரு முறை அப்பாவியாக கேட்டேன். அதற்கு அவர் லேசாக சிரித்து விட்டு பதில் கூறாமல் போய் விட்டார். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது!
 
 
 
சில வருடங்கள் கழித்து தொலைக்காட்சி வந்தது. 1975ம் வருடம் தான் முதன் முதலில் மெட்ராஸில் தொலைக்காட்சி ஒளிபரப்பை ஆரம்பித்தனர். அப்போதெல்லாம் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி தான். ஒவ்வொறு சனி ஞாயிறன்றும் மாலை 7 மணிக்கு ஏதாவது ஒரு திரைப்படத்தை போடுவார்கள். எங்களது தெருவில் உள்ள நண்பனின் வீட்டில் மட்டும் தான் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். சரியாக 6.55 மணிக்கு நாங்கள் அனைவரும் நண்பனின் வீட்டில் ஆஜராகி விடுவோம். அனைவரும் தரையில் உட்கார்ந்து கொண்டு திரைப்படம் முடியும் வரை பார்த்து கொண்டிருப்போம். நடுவில் ஒரு 15 நிமிடங்கள் செய்திகளுக்காக இடைவெளி இருக்கும். அப்போது வீட்டுக்கு சென்று அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு மீண்டும் மீதி திரைப்படத்தை பார்க்க கிளம்பி விடுவோம்! இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு பத்து முறையாவது "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்று ஒரு அட்டையை காண்பிப்பார்கள். ஜெயில் சிங் ஜனாதிபதியாக இருந்த போது ஜனவரி 25ம் தேதி இரவு வழக்கம் போல நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஆனால் அவரது உரை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு slide போட்டார்கள்  - "Please standby for President's massage to the nation". வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவம் இது.
 
ஒவ்வொறு புதன்கிழமையும் 'எதிரொலி' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதில் பார்வையாளர்களின் கடிதங்களை வாசிப்பார்கள். பாதிக்கு மேல் வசை பாடும் கடிதங்களாக தான் இருக்கும். தொலைக்காட்சியின் அதிகாரி முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பார். அதை ரசிப்பதற்காகவே (!) ஒரு கூட்டம் இருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!

சில மாதங்கள் கழித்து மேலும் சிலரது வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை வாங்கினார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் 'ஒளியும் ஒலியும்' என்ற நிகழ்ச்சி வரும். இதில் ஒரு முக்கால் மணி நேரம் சினிமா பாடல்களை போடுவார்கள். ஒரு சிலர் வீட்டு வாசலில் ஒரு சிறிய உண்டியலை பொருத்திவிட்டு, பெரியவர்களுக்கு 50 பைசா, சிறுவர்களுக்கு 25 பைசா என்று வசூல் செய்த கதையும் நடந்தது. ஆனால் இதெல்லாம் புதிதாக காலனிக்கு வருபவர்களிடம் தான். நாங்கள் யாருமே இது வரை ஒரு பைசா கூட கொடுத்தது கிடையாது. எல்லாமே ஓசி தான். ரொம்ப பேசினால் அவர்கள் வீட்டு பையனை எங்களது கூட்டத்திலிருந்து நாடு கடத்திவிடுவோம் என்ற அச்சம் தான். அதனால் அவர்களும் பெரிதாக கண்டு கொள்ளாமல் எங்களை ஓசியிலேயே பார்க்க விட்டார்கள்.
 
1982ம் வருடம் டெல்லியில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்த போது தான் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் வானொலியை கேட்பது அறவே நின்று விட்டது. வானொலியை கேட்பவர்களை ஏதொ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்களை போல பார்த்தனர். "உங்கள் வீட்டில் இன்னுமா டி.வி. வாங்கவில்லை?" என்று ஏதோ 7 ஜென்மத்து பாவத்தை செய்து விட்டதை போல கேட்பார்கள். மனைவிமார்களின் நச்சரிப்பு தாங்காமல் பலரது வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை வாங்க ஆரம்பித்தனர். வானொலி பெட்டி அனைவரின் வீட்டிலும் ஒரு காட்சி பொருளாகவே மாறி விட்டிருந்தது.
 
1990களில் பல தனியார் தொலைக்காட்சியினர் வர ஆரம்பித்திருந்தனர். கிட்டத்தட்ட வானொலியை அனைவரும் மறந்தே போய் விட்டனர். சீரியல் நோய் என்கிற புது விதமான கலாச்சாரம் பரவ ஆரம்பித்திருந்தது. 'சித்தி' என்ற நெடுந்தொடரில் அடுத்த வாரம்  ராதிகா என்ன செய்ய போகிறார் என்று எங்கு பார்த்தாலும் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். பொங்கல், தீபாவளி என்று பண்டிகைகள் வந்தால் முன்பெல்லாம் உறவினர்கள் வீட்டுக்கு சென்று வாழ்த்து கூறுவது வழக்கமாக இருந்தது. இந்த தொலைக்காட்சி பெட்டி வந்த பிறகு, பொங்கலன்று காலையில் புது திரைப்பட பாடல்களும் காட்சிகளும் போட ஆரம்பித்தனர். தெரியாமல் அந்த நேரத்தில் உறவினர்கள் வீட்டுக்கு நீங்கள் சென்று விட்டால் அதோகதி தான். அந்த வீட்டுக்கார அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். நம்மை உட்கார வைத்து விட்டு அனைவரும் தொலைக்காட்சி பெட்டியையே பார்த்து கொண்டிருப்பார்கள். நடுவில் வரும் விளம்பர இடைவேளை வரும்போது மட்டும் நாம் இருக்கிறோம் என்கிற நினைவு வந்து நமது பக்கம் திரும்பி "அப்புறம்? வேற என்ன விசேஷம்?" என்று கேட்பார்கள். அதற்குள் விளம்பரம் முடிந்து தொலைக்காட்சியில் பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டிருக்கும். நாமும் அடுத்த விளம்பர இடைவேளை எப்போது வரும் என்று காத்திருந்து விட்டு அது வந்த உடனே நைசாக நழுவும் வழியை பார்ப்போம்.
 
தனியார் வானொலி நிலையங்கள் வந்த பிறகு தான் மீண்டும் வானொலி புத்துயிர் பெற்றது என்றே சொல்லலாம். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, எந்த நிலையத்தை வைத்தாலும் குப்பை பாடல்களாக தான் வருகின்றது. "மன்மத ராசா", "கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடி போலாமா", "எவண்டி ஒன்ன பெத்தான்" என்று தமிழ் சேவை புரிந்து கொண்டு பாடல்கள் வருகின்றன. தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளும் இதற்கு சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு ஆபாசத்தை வீசுகின்றன. சத்தியமாக சொல்கிறேன், இப்போதெல்லாம் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது.
நல்ல வேளை எனக்கு பிடித்த பழைய பாடல்களை எனது கணிணியில் சேமித்து வைத்துள்ளேன். எனது பெண்ணுக்கு அதில் ஒரு பாடல் கூட சுத்தமாக பிடிக்காது. அவளுக்கு "ஒரு கூடை சன்லைட்" என்று நான்கு நாட்கள் மலச்சிக்கலில் மாட்டிக்கொண்டவன் போல யாரோ கத்தும் பாடல் தான் பிடித்திருக்கிறது. கேட்டால் அது "யோ" பாடலாம். என்ன எழவோ!
 
இரவில் தூங்கும் முன் பி.சுசீலாவின் "நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்" என்ற அருமையான பாடலை கேட்டு கொண்டே எனது பழைய வானொலி பெட்டியை நினைத்து கொண்டேன். எனது நினைவுகளை போன்றே அதுவும் மெல்ல தூங்கி கொண்டிருக்கிறது.