Tuesday, 28 October 2008

பச்சோந்திகள்

நாம் சில 'பெரிய' மனிதர்களை மிகவும் மதித்து போற்றுவோம். அவர்களின் கொள்கை பிடிப்பு மிகவும் புரட்சிகரமானதாக இருக்கும். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் அவர்களின் உண்மையான முகத்தை பற்றி கூறும்போது அவர்களின் மேல் வைத்திருந்த மதிப்பே போய்விடும்.

எனது பெரியப்பா தமிழக காவல் துறையில் பல வருடங்கள் பணி புரிந்தவர். அவர் காலமாகி சில வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய வேலை என்னவென்றால் கட்சி தலைவர்கள் பொது கூட்டங்களிலோ கட்சி கூட்டங்களிலோ பேசும்பொழுது அதை பற்றி குறிப்பு எடுத்து அதை உடனுக்குடன் தலைமை செயலகத்துக்கு தெரியப்படுத்துவது தான். இது போன்ற குறிப்புகள் முதல்வரின் நேரடி பார்வைக்கு செல்லும். காலா காலமாக கட்சி பாகுபாடு இல்லாமல் யார் முதல்வராக வந்தாலும் நடை பெற்று வரும் வழக்கம் இது. வேலை நிமித்தமாக பல கட்சி தலைவர்களுடைய பொதுக்கூட்டங்களுக்கும் கட்சி கூட்டங்களுக்கும் (பொது ஜனம் போல சாதாரண உடையில் சென்று) குறிப்பெடுத்து நேரிடையாக தகவல் சொல்லும் ஒற்றர் பணியில் எனது பெரியப்பா இருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், வந்திருப்பது காவல் துறையின் நபர் என்பது அந்தந்த தலைவர்களுக்கும் தெரியும்! பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல தான் இது!

அவர் ஓய்வு பெற்ற பின் எங்களிடம் பல தலைவர்களை பற்றிய ருசிகரமான சம்பவங்களை பற்றி கூறுவார்.

கடவுள் எதிர்ப்பு கொள்கையை மிக தீவிரமாக கொண்ட ஒரு கட்சி தலைவரை பற்றி எனது பெரியப்பா கதை கதையாக கூறுவார். அவர் பொதுக்கூட்டங்களில் மிக வீரமாக பேசும்போது ஆலய மணி அடிப்பதை போன்று இருக்குமாம்! அவரின் பேச்சை (60களில்) கேட்பதற்கு கூட்டம் அலை மோதுமாம். "பகுத்தறிவு" என்று கூறிக்கொண்டு மேடை மேடையாக, தெருத்தெருவாக கடவுள் எதிர்ப்பையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே தங்களது பரம விரோதிகளாக பாவித்து அவர்களை கண்டால் செருப்பால் அடிக்குமாறு தங்களது தொண்டர்களை தூண்டி விட்டு பேசுவதில் அவர் வல்லவர். "பாம்பையும் ....னையும் கண்டால் பாம்பை விட்டு விடு. ....னை உடனடியாக கொன்றுவிடு" என்று (இத்தனை வருடங்களுக்கு பிறகு கூட) அமிலத்தை கக்கும் அந்த தலைவர் எப்பொழுதும் கறுப்பு சட்டையுடன் தான் வெளியே செல்வார். எனது பெரியப்பாவை பொதுக்கூட்டத்தில் முதல் வரிசையில் கண்டதும் மேடையிலேயே அந்த தலைவர் "மாமியார் வீட்டிலிருந்து வந்துட்டாங்கய்யா" என்று நக்கலாக கூறுவாராம்.


இவரது வீட்டுக்கு அடிக்கடி எனது பெரியப்பா சென்றிருக்கிறார். வெளியே வெறுப்பை கொட்டி பேசும் இந்த தலைவரின் வீட்டில் நிலைமை தலைகீழாம். அது மட்டுமல்ல, அவர் வீட்டில் அணிவது தூய வெள்ளை வெளேர் என்ற சலவை சட்டையை தானாம். ஆச்சரியமாக இருக்கிறதா? சற்று பொறுங்கள். அவரது வீட்டின் உள் அறையில் சுவற்றில் அத்தனை சாமி படங்களையும் காணலாமாம்! வெளியே பகுத்தறிவு பிரசாரத்தை மேற்கொள்ளும் இவருக்கு ஜோதிடத்தின் மேல் அலாதியான நம்பிக்கையாம். இது எப்படி இருக்கிறது?

மற்றொரு மிகப்பெரிய பகுத்தறிவு தலைவரின் வீட்டிலும் இதே கதை தானாம். இவரது மனைவி, மக்கள், பேரன் பேத்திகள் எல்லோரும் ஆத்திகவாதிகள். இவர் மட்டும் தீவிர கடவுள் எதிர்ப்பை பொது வாழ்க்கையில் கடைபிடித்து வருபவர். (இவரின் வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் கோவிலில் இவருடைய பிறந்த நாளில் இவருடைய பெயரில் அர்ச்சனையே நடந்தது). "உபயம் இன்னார்" என்று இவருடைய பெயரை வெளிப்படையாகவே எழுதியிருந்தார்கள்!

இவர்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் தங்களது இரட்டை வேடத்தால் இவர்கள் ஏமாற்றி வருவது என்றாவது ஒரு நாள் வெளியே தெரிய வந்தால் என்ன செய்ய போகிறார்களோ? இவர்களை ஆட்டு மந்தை போல நம்பி வந்த தொண்டர்களுக்கு என்ன பதில் கூறுவார்கள்? அரசியலில் மானமாவது மரியாதையாவது, வெங்காயம், இதெல்லாம் சகஜம்ப்பா!

Tuesday, 21 October 2008

தித்திக்கும் தீபாவளி

வந்தேவிட்டது மற்றொரு தீபாவளி. எங்கு பார்த்தாலும் கூட்டம் கரை புரளும் நேரம் இது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஒரு மகிழ்ச்சியான நேரம் தான்.





மற்ற பண்டிகைகளுக்கும் தீபாவளிக்கும் ஒரு முக்கியமான வித்யாசம் உள்ளது. அதுதான் பட்டாசு. வருடா வருடம் விதம்விதமான பட்டாசுகள் வருகின்றன. ஆனால் அதற்கு தகுந்தாற்போல விலையும் கூடிக்கொண்டே போகிறது. நான் சிறுவனாக இருந்த போது தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே அதை பற்றிய கனவுடன் இருப்போம். எங்களது தெருவில் இருந்த பணக்கார நண்பன் "எங்கள் வீட்டில் நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கி இருக்கிறோம்" என்று பீற்றிக்கொள்வான். அப்பொழுதெல்லாம் நூறு ரூபாய் என்பது மிக பெரிய தொகை.






தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு தான் எனது தந்தை பட்டாசுகளை வாங்கி வருவார். அதற்கு முன்னால் வாங்கினால் கொளுத்தி தள்ளிவிடுவோம் என்று அவருக்கு தெரியும்! 40 ரூபாய்க்கு ஒரு பெரிய பை நிறைய பட்டாசுகளை வாங்கி வருவார். (இப்போதெல்லாம் 40 ரூபாய்க்கு ஒரு வெடி வந்தாலே அதிசயம் தான்!). அதை உடனே ஒரு பெரிய செய்தி தாளில் விரித்து காய வைப்போம். யாரும் எந்த வெடியையும் எடுத்து விடாமல் காவல் தெய்வமாக எனது அண்ணன் இருப்பான்! லக்ஷ்மி வெடி, குருவி வெடி, ஊசி பட்டாசு, இரயில், பூந்தொட்டி, அணுகுண்டு, மத்தாப்பு என்று விதவிதமான பட்டாசுகளை பார்க்கும்போதே மிக ஆசையாக இருக்கும்.






தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு தான் பட்டாசு பையை பிரிப்பார்கள். முதல் வெடி எப்பொழுதுமே அணுகுண்டு தான். உண்மையிலேயே மிக பயங்கர வெடி சத்தம் அணுகுண்டில் தான் இருக்கும். வீட்டின் உள்ளே இருந்து பாட்டி "கடங்காரா, தெருவில் போய் வெடியேன்டா" என்று கத்தியவுடன் ஒரு குரூர(!) திருப்தியுடன் வெளியே சென்று ஒவ்வொறு பட்டாசாய் வெடிக்க ஆரம்பிப்போம். மத்தாப்பு, குருவி வெடி, சட்டி வாணம் என்று ஒவ்வொன்றாய் மாற்றி மாற்றி வெடிக்க மறுநாள் காலை வெடிப்பதற்காக சில வெடிகளை பதுக்கி வைப்போம்.





தீபாவளியன்று காலை 3 மணிக்கே எழுந்து முதல் வெடியை வெடிக்க வேண்டும் என்று முந்தைய நாள் மாலையிலேயே நண்பர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வோம். அன்று இரவு தூக்கமே வராது. கிட்டத்தட்ட இரவு ஒரு மணி வரை அங்கொன்றும் இங்கொன்றும் வெடி சத்தம் கேட்டு கொண்டே இருக்கும்.








அதிகாலை 3 மணி ஆனது தான் தாமதம். வெளியே வந்து முதலில் ஒரு லக்ஷ்மி வெடியை வெடித்து தெருவையே எழுப்பி விட்டுதான் மறுவேலையே. அதற்குள் அம்மா உள்ளே இருந்து அனைவரையும் கூப்பிட்டு தீபாவளி மருந்தை கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பார். அடுத்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு அவசரம் அவசரமாக வீட்டில் செய்த இனிப்புகளை சாப்பிட்டு விட்டு மீண்டும் மிச்ச சொச்ச வெடிகளை வெடிக்க புறப்பட்டு விடுவோம். ஒரு ஆறு மணி வாக்கில் ஆய்ந்து ஓய்ந்து வீட்டுக்குள் வருவோம்.



உறவினர்கள் ஒவ்வொருவராக வர தொடங்குவார்கள். அவர்களின் வருகையே மிக மகிழ்ச்சியாக இருக்கும். பிற்காலங்களில் இந்த பாழாய்ப்போன தொலைக்காட்சி வந்த பிறகு எல்லோர் வீட்டிலும் விருந்தோம்பலின் அணுகுமுறையே மாறிவிட்டது.





தொலைக்காட்சியில் அன்று வெளிவந்த திரைப்படங்களின் பாடல் காட்சிகள், நடிக நடிகைகளின் அனுபவங்கள் போன்ற 'முத்துக்கள்' ஒளிபரப்ப துவங்கியபின் தெரியாமல் யாராவது உறவினர் வீட்டுக்கு வந்து விட்டால் போதும். வேண்டா வெறுப்பாக அவரை வரவேற்று 'உபசரிக்கும்' கலாச்சாரம் மெல்ல வர துவங்கியது. அப்படியே யாராவது உறவினர் வந்து விட்டால் கூட அவரிடம் பேசுவதை விட்டுவிட்டு தொலைக்காட்சி பெட்டியையே பார்த்து கொண்டிருப்பார்கள். நடுவில் விளம்பர இடைவெளி வரும்போது மட்டும், விருந்தினர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்ற ஞானோதயம் ஏற்பட்டு, "அப்புறம் வேறு என்ன விசேஷம்?" என்று அவரிடம் கேட்க ஆரம்பிப்பார்கள். அதுவும் அந்த ஒரு நிமிடம் தான். மீண்டும் நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் பழைய குருடி கதவை திறடி என்று தொலைக்காட்சியில் தங்களையே தொலைத்து விடுவார்கள்.



என்ன இருந்தாலும் தீபாவளியை போன்ற மகிழ்ச்சி வேறு எந்த பண்டிகையிலும் இல்லை என்றே கூறலாம். பதினொறு வருடங்களாக செளதியில் வேலை செய்கிறேன். வெடிச்சத்தமும், நண்பர்களுடன் அடித்த கும்மாளங்களும், சொந்த பந்தங்கள், குழந்தைகள் பெரியோர்களுடன் கழித்த அருமையான இந்த பண்டிகையை நம்மால் அது போல இங்கு கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் இன்னும் உள்ளது. பணத்துக்காக உயிரை அடகு வைத்து விட்டோமோ என்று உள்ளம் கேட்கிறது. பதில் தான் இல்லை.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Wednesday, 15 October 2008

டூ வீல‌ர் ஓட்டிய‌ க‌தை

இப்பொழுதெல்லாம் 15 வயது பையன்கள் எல்லாம் சாலையில் 'டூ வீலர்களை' ஓட்டி செல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. எனக்கும் 12 வயது வரை 'டூ வீலர்' ஓட்ட தெரியாது. அதாங்க, சைக்கிளை பற்றி தான் சொல்கிறேன்!



"சைக்கிளை ஓட்டி கீழே எங்கேயவது விழுந்து பல்லை கில்லை உடைத்து கொள்ளாதே. போய் படிக்கிற வேலையை பாரு" என்று வீரத்தை பிஞ்சிலேயே ஊட்டி எனது வீட்டில் வளர்த்தனர். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று எனது சித்தியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். சித்தியின் பையன் கோபி என்னைவிட ஒரு வயது சிறியவன். அவன் நான் வருவதை அறிந்ததும் எங்கிருந்தோ ஒரு வாடகை சைக்கிளை எடுத்து வந்து (1 மணி நேரத்துக்கு 50 பைசா!) ஹாண்டில் பாரை கூட பிடிக்காமல் கைகள் இரண்டையும் தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு 'ஹோ' என்று கத்திக்கொண்டே சைக்கிளை சாலையில் ஓட்டி என்னை வெறுப்பேற்றினான்.



நாம் தான் தன்மான சிங்கமாயிற்றே! 'பூ! இது என்ன பெரிய வேலை' என்று கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பின் சக்கரத்தின் நடுவில் குத்த, அவன் உருட்டி அடித்துக்கொண்டு கீழே விழுந்து கை கால் எல்லாம் சிராய்த்து கொள்ள, அங்கு ஒரு பெரிய அடிதடியே உருவாகும் சூழ்நிலை உருவாகிவிட்டது. கடைசியில் அமெரிக்காவும் இந்தியாவும் அணு ஒப்பந்தம் செய்து கொண்டது போல ஒரு சமரசம் செய்து கொண்டோம். அதாவது, அவன் வீட்டுக்கு தெரியாமல் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டியதை நான் அவன் அம்மாவிடம் கூற மாட்டேன். பதிலுக்கு, அவன் அதே வாடகை சைக்கிளில் எனக்கு ஓட்ட கற்று கொடுக்க வேண்டும்' என்பது தான் அந்த ரகசிய ஒப்பந்தம்!



அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல பின் சக்கரத்துக்கு இரண்டு புறமும் விழுந்தால் தாங்கிக்கொள்ள இரண்டு சிறிய சக்கரங்கள் கொண்ட stand எல்லாம் கிடையாது. விழுந்தால் அடிபட்டுக்கொள்ள வேண்டியது தான். அதாவது, உண்மையிலேயே 'டூ வீலர்' தான்!



என்னை சீட்டில் உட்கார்த்தி வைத்து விட்டு "நேராக பார். அங்கே இங்கே பார்த்தால் கீழே விழுந்து விடுவாய்" என்று 'தைரியம்' கொடுத்து பின்னால் உள்ள காரியரை கோபி பிடித்துக்கொண்டான். பெடலை மிதித்ததுதான் தாமதம். சைக்கிள் பயங்கரமாக இரு பக்கமும் ஆடத்துவங்கியது. "மிதிடா" என்று அவன் கத்த, நான் மிதிக்க , சைக்கிள் நேராக போய் ஒரு சுவற்றில் மோத, நான் ஒரு பக்கம், சைக்கிள் ஒரு பக்கம் என்று விழுந்தோம். ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு சைக்கிளை தூக்கி பார்த்தால் அழுகையே வந்து விட்டது. முன் சக்கரம் வலது பக்கமாகவும் ஹாண்டில் இடது பக்கமாகவும் திரும்பிக்கொண்டிருந்தது. "என்னடா செய்வது, சைக்கிள் கடைக்காரனுக்கு என்ன பதில் சொல்வது" என்று நான் கோபியை கேட்க அவனோ கவுண்டமணி பாணியில் "இதெல்லாம் சகஜம்டா" என்று வீர வசனம் கூறி முன் சக்கரத்தை இரண்டு தொடைகளுக்கு நடுவில் வைத்து ஹாண்டிலை நேர் படுத்தினான்.



மீண்டும் காரியரை பிடித்துக்கொண்டு அவன் கூடவே ஓடி வர நான் மெல்ல பெடலை மிதிக்க தொடங்கினேன். சாலை ஓரத்தில் 90 டிகிரி வளைவு இருந்தது. கோபி மூச்சிரைக்க காரியரை பிடித்துக்கொண்டே ஓடி வர நான் கொஞ்சம் கொஞ்சமாக பெடலை வேகமாக அழுத்தி வளைவில் திரும்பினேன். 'டமார்' என்று ஒரு சத்தம். ஒரு இரண்டு வினாடிகளுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.நானும் சைக்கிளும் முன்போல தெருவில் தூக்கி வீசப்பட்டிருந்தோம். என்னடா, எல்லாம் இரண்டு இரண்டாக தெரிகிறதே என்று பார்த்தால், என்னை போலவே இன்னொரு பிரகஸ்பதி சைக்கிள் கற்றுக்கொண்டு எதிர் பக்கத்தில் இருந்து வந்து என்னுடைய சைக்கிளில் மோதியிருக்கிறான்!



முட்டியிலிருந்து இரத்தம் கொட்ட எனது சைக்கிளில் இடித்தவனை "எல் போர்டு, முள்ள மாரி, கேப் மாரி" என்று சிறப்பான சென்னை செந்தமிழில் திட்டிக்கொண்டே எழுந்தேன்.



பாவம், அவனுக்கும் அடி பட்டிருந்ததால் அவனையும் எழுப்பி "நீ அடுத்த தெருவுக்கு போய் ஓட்டு" என்று கூறிவிட்டு, மீண்டும் எனது புனித பயணத்தை தொடர்ந்தேன்.



கோபி காரியரை பிடித்துக்கொண்டே கூட ஓடி வர‌, ஒரு கட்டத்தில் அவன் "கவலைப்படாதே, நான் பிடித்துக்கொண்டு தான் இருக்கிறேன்" என்று தைரியம் ஊட்ட, ஹாண்டிலில் முன்பு இருந்த ஆட்டம் இப்போது குறைந்ததை கண்டு பெருமையாக இருந்தது. "பார்டா கோபி, இப்போது ஹாண்டில் ஆடாமல் இருக்கிறது. வாடகை வண்டி என்றாலே இப்படி தான், ஏதாவது ஓட்டை உடைசலை கொடுத்து நம் தலையில் கட்டி விடுவார்கள்" என்று நான் பேசிக்கொண்டே சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தேன். 'என்னடா, ஒன்றுமே பேசாமல் வருகிறாய்' என்று நான் கேட்க பதிலே இல்லை.



திடீரென்று திரும்பி பார்த்தால் எனது முகமே வெளிறி விட்டது. கோபி தெருக்கோடியில் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அடப்பாவி, அப்போது நான் தனியாகவா இத்தனை நேரம் ஓட்டிக்கொண்டிருந்தேன்? ஐயோ, பிரேக் வேறு பிடிக்கவில்லையே, என்ன செய்வது என்று பதற ஆரம்பித்ததுதான் தாமதம். டமால் என்று பிளாட்பாரத்தின் மேல் ஏற்றி வெற்றிகரமாக வண்டியை சுவற்றில் மோதி நிறுத்தினேன்.



'இதுக்கு மேல தாங்க முடியாதுடா சாமி' என்று சைக்கிளை தூக்கி கொண்டு எழுந்திருக்க, கோபி சாவகாசமாக நடந்து வந்தான். அவனை பிடித்து இரண்டு சாத்து சாத்தலாமென்று கருவிக்கொண்டிருக்கும் போதே 'பராவயில்லைடா. ரொம்ப சீக்கிரமாகவே சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டியே' என்றான். ஓ, அப்படியா? எனக்கும் இப்போது டூ வீலரை ஓட்ட தெரியுமா?



சைக்கிளை தள்ளிக்கொண்டே வாடகை கடை இருக்கும் தெரு வரை வந்தோம். எட்டி பார்த்தால் கடைக்காரருக்கு பதில் அவருடைய மகன் உட்கார்ந்து கொண்டிருந்தான். நல்ல வேளை, தப்பித்தோம். கடையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அவனிடம் 50 பைசாவை கொடுத்துவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடி விட்டோம். இனி ஒரு மாதத்துக்கு இந்த தெரு பக்கமே தலை வைத்து படுக்க கூடாது!



வீட்டுக்குள் பதுங்கி பதுங்கி நுழைந்த உடனேயே வீர தழும்புகளை எல்லோரும் பார்த்து விட்டனர். 'அது ஒன்றும் இல்லை, விளையாடும் போது கீழே விழுந்து விட்டேன்' என்று நான் கூற கோபி என்னை முறைத்து பார்த்தான்! பின்னே என்ன, வாடகை சைக்கிளை திருட்டுத்தனமாக வாங்கி ஓட்டி கீழே விழுந்து அடியா பட்டுக்கொண்டேன்?


Saturday, 11 October 2008

நவீன இரத்த காட்டேரிகள்

1997ம் ஆண்டு. நான் சூரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம். திடீரென்று எனது 3 வயது குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றேன். குழந்தையை பார்த்த மருத்துவர், தெருக்கோடியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பரிசோதனை கூடத்தில் (lab) சென்று குழந்தையின் இரத்தத்தை பரிசோதித்து கொண்டு வருமாறு கூறினார். நானும் அப்படியே சென்று அந்த ரிப்போர்ட்டை மருத்துவரிடம் கொடுத்தேன். அதை 10 வினாடிகளுக்கு கூட அவர் பார்த்திருக்க மாட்டார். "உங்கள் குழந்தைக்கு மலேரியா உள்ளது. இது சரியாக 14 நாட்களாகும். ஆனால் சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து ஒரு மாத்திரை வந்துள்ளது. சற்று விலை அதிகம். ஆனால் இதை சாப்பிட்டால் இரண்டே நாட்களில் குணமாகிவிடும். உங்களுடைய விருப்பம் எப்படியோ அப்படி செய்யுங்கள்" என்று கூறினார்.
பதறிப்போன நானும் எனது மனைவியும், "விலை அதிகமானாலும் பரவாயில்லை, குழந்தை சீக்கிரம் குணமாக வேண்டும்" என்று அவரிடம் கூறினோம். அவர் உடனே ஒரு குறிப்பிட்ட மருந்து கடைக்கு போன் செய்து கடைக்காரரிடம் அந்த மருந்தை தருமாறு கூறினார். 200 ரூபாய் feesஐயும் வாங்கி கொண்டார்.

மருந்து கடைக்கு சென்றால் அவன் ஒரு மாத்திரையை கொடுத்து (ஒரே ஒரு மாத்திரை தான்) "இதன் விலை 300 ரூபாய். ஆனால் இதற்கு நான் ரசீது கொடுக்க முடியாது. ஏனென்றால் இது வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டது" என்று கூறினான். ஒரு மாத்திரை 300 ரூபாய் என்பது மிக அதிகமாக இருந்தாலும் மருத்துவர் ஏற்கனவே இதை பற்றி கூறி இருந்ததால் நாங்களும் அதை வாங்கி குழந்தைக்கு கொடுத்தோம். 4-5 நாட்களுக்கு பிறகு குழந்தை குணமாகியது.

சில நாட்களுக்கு பிறகு எங்களது பக்கத்து வீட்டில் இருந்த மற்றொரு மருத்துவரிடம் இதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர் கூறியது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "உங்களது குழந்தைக்கு வந்தது மலேரியாவாகவே இருந்திருக்காது. அவர் குறிப்பிட்ட அந்த பரிசோதனைக்கூடத்துக்கும் மருத்துவருக்கும் ஒருவித எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது (understanding). அதே போல, மருந்து கடைக்கும் மருத்துவருக்கும் கூட ஒரு understanding உள்ளது. உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்" என்று கூறினார்.
எனக்கு அந்த மருத்துவர் மேல் இருந்த மதிப்பே போய் விட்டது. 'சரி, எப்படியோ நம் குழந்தை குணமாகி விட்டது' என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

இது முடிந்து ஒரு 3 வருடங்களுக்கு பிறகு சென்னையின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் (ஒரு அமெரிக்க ராக்கெட்டின் பெயர் கொண்டது) எனது தந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை (open heart bypass surgery) நடைபெற்றது. இந்த மருத்துவமனையின் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளன. எனது தந்தையை அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள், இரண்டரை லட்சம் ரூபாயை 'ரொக்கமாக' கொடுக்கும்படி மருத்துவமனையில் கூறினார்கள். நான் காசோலையாகவோ (cheque) வங்கியில் எடுத்த draft ஆகவோ கொடுப்பதாக கூறியும் "எங்களுக்கு நீங்கள் cashஆக தான் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் நாளை அறுவை சிகிச்சை செய்ய முடியாது" என்று கறாராக கூறி விட்டார்கள். நாங்கள் அவசரம் அவசரமாக வங்கிக்கு சென்று பணத்தை ரொக்கமாக எடுத்து ஒரு பெரிய பையில் போட்டுக்கொண்டு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு வந்து அதை கொடுத்தோம். எங்களுக்கு மிகவும் பயமாக இருந்தது. வழியில் ஏதாவது ஆகியிருந்தால் மொத்த பணம் போவது மட்டுமல்லாமல் நாளை அறுவை சிகிச்சை கூட செய்ய முடியாமல் போய்விடுமே என்று மிகவும் பயந்து கொண்டிருந்தோம். நல்ல வேளையாக பணத்தை அந்த cashierஇடம் கொடுத்த பிறகுதான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது.

அறுவை சிகிச்சை நடந்து ஒரு 10 நாட்களுக்கு பிறகு எனது தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தோம். இரவு ஒரு 2 மணி இருக்கும். திடீரென்று எனது தந்தை விளக்கை போடுவதற்காக தூக்கத்தில் இருந்து எழுந்தார்.
திடுக்கிட்டு எழுந்த நாங்கள் அவரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து விட்டோம். அவரது மார்பிலிருந்து இரத்தம் சிறிது சிறிதாக கசிந்து கொண்டிருந்தது. உடனடியாக ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு மீண்டும் அந்த மருத்துவமனைக்கே அவரை அழைத்து சென்றோம். சாவகாசமாக வந்த மருத்துவர் அவரை உடனடியாக மீண்டும் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். என்ன விஷயம் என்றால், முதன் முறை அறுவை சிகிச்சை செய்து விட்டு தையல் போட்டார்கள் அல்லவா, அந்த தையல் பிரிந்து அந்த இடத்தில் infectionஆகி விட்டிருந்ததாம். மீண்டும் பழையபடியே வங்கிக்கு சென்று 25000 ரூபாயை ரொக்கமாக ஒரு பையில் போட்டுக்கொண்டு பணத்தை மருத்துவமனையில் கொடுத்தோம். (இத்தனைக்கும் இது மருத்துவர்களின் தவறு. ஆனால் இதை யாரிடம் போய் அழுவது?) ஒரு வழியாக நல்லபடியாக எல்லாம் நடந்து முடிந்தது.

எனது நண்பர்களிடம் இந்த இரண்டு சம்பவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இது போல பல இடங்களில் இப்போதெல்லாம் நடக்கிறதாம். ஒரு காலத்தில் மருத்துவர்களை கடவுளுக்கு இணையாக மதித்த காலம் இருந்தது. ஒவ்வொறு குடும்பத்துக்கும் 'குடும்ப மருத்துவர்' என்றே ஒருவர் இருப்பார். சுயநலமில்லா சேவையை செய்து வந்தனர். இப்பொழுது என்னவென்றால், வரும் நோயாளிகளிடம் எவ்வளவு பணம் பிடுங்கலாம் என்றே குறியாக இருக்கின்றனர். ஒரு மருத்துவ மாணவனிடம் இதை பற்றி நேரிடையாக கேட்டேன். அவன் கூறிய பதில் அதிர்ச்சியாக இருந்தது. "நாங்கள் பல லட்ச ரூபாய் கொடுத்து இந்த சீட்டை வாங்கி கஷ்டப்பட்டு (?) படித்து முடிப்பதற்குள் இன்னும் சில லட்சங்கள் எங்களுக்கு செலவாகின்றது. அதை நாங்கள் யாரிடம் வசூல் செய்வதாம்?" என்றான்.

இது போன்ற கிராதகர்களிடம் மாட்டிக்கொள்வதை விட மரணமே பரவாயில்லை என்றே தோன்றுகிறது. இவர்களையும் இது போன்ற மருத்துவமனைகளையும் தட்டி கேட்கவே முடியாதா? Indian Medical Association என்று ஒன்று உள்ளதாம். அதில் புகார் செய்தால் கூட ஒன்றும் நடக்காதாம். ஏனென்றால் அதில் உள்ளவர்கள் கூட மருத்துவர்கள் தானே! நான் எல்லா மருத்துவர்களை பற்றியும் குறை கூறவில்லை. நல்லவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் அது போன்றவர்கள் அத்திப்பூ பூத்தாற்போல் இருக்கிறார்கள்.
ஏழைகள் பரவாயில்லை. தங்களால் சிகிச்சையை afford செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும். எதிர்ப்பார்ப்பு இல்லாததால் ஏமாற்றமும் இல்லாமல் மரணத்தை தைரியமாக எதிர்கொள்கிறார்கள். பணக்காரர்களுக்கோ இந்த பிரச்னையே இல்லை. நடுவில் மாட்டிக்கொள்பவர்கள் இந்த நடுத்தர வர்கத்தினர்தான்.

இறைவா! மனிதனுக்கு நோயும் கடனும் மட்டும் வரக்கூடாது. மீதி எல்லாவற்றையும் சமாளித்து விடலாம்.

Tuesday, 30 September 2008

எங்கே இருக்கிறீர்கள் தபால்காரரே?

சில வருடங்களுக்கு முன்பு நினைத்து கூட பார்த்திராத அபூர்வமான காட்சியை சமீபத்தில் சென்னைக்கு சென்றிருந்தபோது கண்டேன். அனைவரின் கைகளிலும் ஒரு கை பேசி இருந்தது. நான் "அனைவரின்" என்று கூறுவது பெரிய பணக்காரர்களை பற்றி அல்ல. தெருவில் குப்பை கூட்டும் பையன், காலையில் பால் கொண்டு வந்து தரும் பெண், வீட்டில் வேலை செய்ய வரும் வேலைக்காரி, என்று சாதாரணமானவர்களை பற்றி தான். யாருமே இப்போதெல்லாம் கடிதம் எழுதுவதில்லை என்றே தோன்றுகிறது. எல்லோர் கைகளிலும் இந்த கைபேசி வந்து விட்டதால் உட்கார்ந்து யோசித்து மெனக்கெட கடிதம் எழுதும் பழக்கம் அறவே நின்று விட்டதோ என்று எண்ணுகிறேன்.



நான் கல்லூரியில் விடுதியில் இருந்த நாட்களை பற்றி யோசித்து பார்த்தேன். வீட்டிலிருந்து கடிதம் எப்போது வரும் என்று ஏங்கிக்கொண்டிருப்போம். நாங்கள் எழுதும் கடிதங்களும் விலாவாரியாக இருக்கும்.




கடிதம் எழுதுவதே ஒரு கலை தான். எனது தந்தை நீண்ட கடிதங்களை எழுத மாட்டார். மொத்தமாகவே மூன்று பத்திகள் தான் இருக்கும் அவர் எழுதும் கடிதங்களில். சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு கடிதத்தை முடித்துவிடுவார். ஆனால் இலக்கண பிழைகள் இல்லாமல் தரமானதாக இருக்கும். கடிதத்தின் வலது பக்கத்தின் மேல் கண்டிப்பாக தேதியும் இடமும் இருக்கும். ஆங்கிலத்தில் சில சமயம் அவர் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தங்களை அகராதி கொண்டு புரிந்து கொண்டிருக்கிறேன் (Ultimo என்றால் சென்ற மாதம், Proximo என்றால் அடுத்த மாதம், இப்படி இருக்கும் அவருடைய சில ஆங்கில கடிதங்களின் வார்த்தைகள்). இது போன்ற வார்த்தைகள் இன்னும் உபயோகத்தில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.




தபால்காரரின் வரவை நாங்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருப்போம். அவர் கொண்டு வந்து கொடுக்கும் கடிதங்களை படிக்கும் போது வெகு தூரத்தில் இருக்கும் நமது உற்றார் உறவினர்களை நேரே பார்ப்பது போல ஒரு அனுபவம் ஏற்படும். எப்பொழுதாவது தந்தி கொண்டு வந்து கொடுத்தால் தந்தியை பிரிப்பதற்குள்ளாகவே அனைவருக்கும் வயிற்றை கலக்கி விடும். ஏனென்றால், தந்தி என்றாலே கெட்ட செய்தியாக தான் இருக்கும் என்று ஒரு பரவலான எண்ணம் இருந்த காலம் அது. சில சமயம் 'மணி ஆர்டர்' கொண்டு வந்து தருவார். அப்போது வந்த பணத்தில் அவருக்கு தேனீர் அருந்துவதர்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் சந்தோஷமாக செல்வார்.



தீபாவளி, பொங்கல் சமயங்களில் தவறாமல் 'இனாம்' வாங்க வந்துவிடுவார் எங்கள் தபால்காரர். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வந்த அதே தபால்காரர் தான் இப்போதும் வருகிறார். அவருடைய முடி நரைத்து இப்போது சில வருடங்களில் ஓய்வு பெற உள்ளார். முன்பெல்லாம் அவருக்கு 'காக்கி' நிறத்தில் சட்டை, பேண்ட் மற்றும் தொப்பி இருக்கும். சில வருடங்களாக பழுப்பு நிறத்திற்கு அதை மாற்றி விட்டனர்.




வெயிலோ, மழையோ எதுவாக இருந்தாலும் தவறாமல் தனது மிதி வண்டியில் தபால்களை கொண்டு வந்து கொடுத்து விடுவார். சில சமயம் முகவரி சரியாக இல்லாமல் போனால் கூட பெயரை வைத்து கொண்டு சரியான வீட்டுக்கு தபால்களை கொண்டு வந்து கொடுத்து விடுவார்.




கை பேசியின் வருகையால் இப்போது யாரும் கடிதங்களும் எழுதுவதில்லை, கடிதங்களை படிப்பதும் இல்லை. இயந்திரத்தனமான வாழ்க்கையில் இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது? நிறுவனங்களில் இருந்து வரும் கடிதங்கள் கூட கணணியில் அடிக்கப்பட்டு 'கொரியர்' பையன்கள் மூலமாக அனுப்பப்படுகின்றன.




மின் அஞ்சல் யுகத்தில் கையால் எழுதும் கடிதங்கள் காணாமல் போய்விட்டன. அதோடு நம் தபால்காரரும் காணாமல் போய்விட்டாரோ? எல்லா ஆரம்பங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை தான் தபால்காரரின் பயணம் கூறுகின்றதோ?

Friday, 26 September 2008

அற்புதமான எலியட்ஸ் கடற்கரை

யானையையும் கடலையும் எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கலாம் என்று கூறுவார்கள். சென்னை எலியட்ஸ் கடற்கரையை அதில் சேர்த்து கொள்ளலாம். அதன் நினைவுகள் என் நெஞ்சில் இருந்து நீங்காதவை.


1970களில் சென்னை பெசண்ட் நகர் என்பது ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடமாக இருந்தது. ஊர் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருந்தாலும் இந்த இடத்தில் மட்டும் தண்ணீர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த நாட்களில் பெசண்ட் நகருக்கு அவ்வளவு பஸ் போக்குவரத்து கூட கிடையாது. இப்போது இருக்கும் பஸ் நிலையம் ஒரு காலத்தில் சுடுகாடாக இருந்தது என்றால் நம்ப முடியுமா?




எலியட்ஸ் கடற்கரையில் அப்போதெல்லாம் கூட்டமே இருக்காது. ஸ்மிட்ஸ் மெமோரியல் என்ற ஒரு கட்டிடம் தான் ஒரு வெள்ளைக்காரரின் நினைவாக இன்றும் இருக்கிறது. நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது அந்த கட்டிடத்தை சுற்றி வந்து விளையாடுவோம். சூரிய கிரகணம் வரும்போதெல்லாம் நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் அந்த கடற்கரையில் குளித்திருக்கிறோம். கடல் குளியலே ஒரு தனி அனுபவம் தான்.
அதற்குப்பின் மஹாலக்ஷ்மி கோவில் மற்றும் மாதா கோவில் கட்டப்பட்டன. இதற்கு பிறகுதான் பெசண்ட் நகர் மிகவும் பிரபலமாக ஆரம்பித்தது.



எலியட்ஸ் கடற்கரையில் மெரினா கடற்கரை போல கசகசவென்று கூட்டம் இருக்காது. எப்போதாவது வரும் சுண்டல் முறுக்கு விற்கும் பையன் என்று மிக அமைதியாக இருக்கும் (இப்போது அப்படி கூற முடியாது).




கடலின் விளிம்பில் நின்று கொண்டு அலைகளை ரசிப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை என்றே கூறலாம். ஒவ்வொறு அலை வந்து கால்களை உரசிவிட்டு செல்லும்போது தரையில் ஒரு சிறு குழிகள் விழும். கால்களை நாம் நகர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் குழிகள் பெரிதாகி கொண்டே போகும். அலைகளின் வேகத்துக்கு நம்மால் நிற்பது கடினமாக போய் விடும். அப்படி உரசும் அலைகளுக்கு நடுவே கிளிஞ்சல்கள், சிறிய கற்கள், நத்தைகள், சிறு பூச்சிகள், என்று ஏராளமான பொருட்கள் வந்து விழும்.




கடற்கரையை நோக்கி நிற்கும்போது நமது அகங்காரம் தவிடுபொடி ஆகிவிடுவதை உணர முடியும். அத்தனை பெரிய கடலின் முன்னால் நாம் நிற்கும்போது நமது அந்தஸ்து, படிப்பு, பகட்டு எல்லாம் தூசி போன்று கடல் காற்றுடன் பறந்து போய் நம்மை சாதாரண மனிதனாய் மாற்றி விடும். இந்த ஆற்றல் சமுத்திரத்தை விட வேறு யாருக்கு உண்டு? அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்த சில்லென்ற காற்றை சுவாசிக்கும்போதும், கடற்கரை அலைகள் நம் கால்களை தொடும்போது மனதில் குடியேறும் அமைதியும் சுகமும் அலாதியான ஒன்று.

கடல் அலைகளும் நமது மனதை போல் தானோ? சாந்தம், சீற்றம், எழுச்சி, அமைதி என்று எல்லவிதமான பரிமாணங்களையும் நாம் அதில் காணலாம் அல்லவா?

இந்த கடலில் எத்தனை எத்தனை ஜீவராசிகள் உள்ளன என்று எண்ணும்போது மிக பிரமிப்பாக இருக்கும். தூரத்தில் போகும் மீனவர்களின் படகுகள் அலைகளுடன் சேர்ந்து ஆடி ஆடி அசைவதை பார்ப்பதிலே ஒரு அலாதி இன்பம் கிடைக்கும். மனது பாரமாக இருக்கும்போது இந்த கடற்கரைக்கு வந்து சிறிது நேரம் அந்த உப்பு காற்றை சுவாசித்தால் லேசாகி ஒரு தெளிவு பிறக்கும்.

தொலைக்காட்சி பெட்டியிலே மெகா சீரியல்களிலும் திரைப்படங்களிலும் ஐக்கியமாகிவிட்டவர்களுக்கு இந்த கடலின் அருமை தெரியாமல் போனது ஒரு துர்பாக்கியமே. இந்த கடற்கரையின் மணலிலே கோபுரம் போல வீடு கட்டி அதில் மகிழ்ந்த நாட்களை எப்படி மறக்க முடியும்?

திடீரென்று எனது தந்தை காலமான பின் அவரது அஸ்தியை இதே எலியட்ஸ் கடற்கரையில் கரைத்தோம். இத்தனை இன்பங்களை கொடுத்த இந்த கடல் அன்னை கடைசியில் இதை கூட எடுத்து கொண்டாளே! பிறந்ததும் தண்ணீரிலே, பிரிவதும் தண்ணீரிலே என்பது இது தானோ? வாழ்க்கை என்பதே இது தானோ?

காலங்கள் பல மாறினாலும் பருவங்கள் பல ஓடினாலும் இந்த கடற்கரையை என்றும் என்னால் மறக்க முடியாது.

Monday, 22 September 2008

மதம் பிடித்த மதம்

மத கலவரங்களை பற்றி செய்தி தாள்களில் படித்திருப்பீர்கள். எப்போதாவது அதில் மாட்டிக்கொண்ட அனுபவம் இருக்கிறதா? எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.


1992 வருடம். டிசம்பர் மாதம். சூரத் நகரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். 'ஷிப்ட்' முறை இருந்ததால் பகல், இரவு என்று மாறி மாறி எனது வேலை நேரம் இருக்கும். எனது நிறுவன வண்டி நெடுஞ்சாலை வரை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வரும். நிறுவனத்தில் வேலை செய்பவர்களை குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றிக்கொண்டு அதே போல அதே இடத்தில் திரும்பி கொண்டு வந்து விட்டு விடும்.



ஆனால் எனது வீட்டிலிருந்து அந்த இடத்துக்கு செல்ல ஒரு ஒற்றையடி பாதை வழியாக தான் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். வழியில் தெருவிளக்கு கூட கிடையாது. அதனால் இரவு 'ஷிப்ட்' ஆக இருந்தால் நிலா வெளிச்சத்தில் தோராயமாக நடந்து செல்ல வேண்டியது தான் ஒரே வழி.


அன்றும் அப்படி தான். இரவு 'ஷிப்ட்' என்பதால் பகலில் தொலைக்காட்சியை பார்க்க கூட நேரமில்லை. வழக்கம் போல ஒற்றையடி பாதையில் நடந்து சென்றேன். ஆனால் என்றுமே இல்லாத அளவு அன்று மயான அமைதி இருந்தது. நெடுஞ்சாலையில் வழக்கம் போல செல்லும் வாகனங்களின் சத்தம் கூட கேட்கவில்லை. ஒரு வளைவில் திரும்பிய உடன் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கண் எதிரே ஒரு மாருதி கார் திகுதிகு என்று எரிந்து கொண்டிருந்தது. ஆனால் பக்கத்தில் யாருமே இல்லை. அதிசயமாக இருக்கிறதே, இந்நேரம் தீயை அணைக்க / வேடிக்கை பார்க்க ஒரு கும்பலே கூடி இருக்குமே. இன்றைக்கு என்ன ஆயிற்று? சாலையில் யாருமே இல்லையே?


ஒரு பத்தடி தான் நடந்திருப்பேன். டமால், டமால் என்று வெடி சத்தம். ஆனால் மறுபடியும் சாலையில் யாரையுமே காணவில்லை. தட்டு தடுமாறி நெடுஞ்சாலை வரை வந்து எனது நிறுவன வாகனம் வழக்கமாக நிற்கும் இடத்துக்கு வந்து விட்டேன். சாலையில் நான் ஒருவன் மட்டும் தான் இருந்தேன். மறுபடியும் ஒரு வெடி சத்தம். திரும்பி பார்த்தால் நான்கைந்து வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தன.



எனக்கு உதறல் எடுத்து விட்டது. ஏதோ ஒன்று நடக்கிறது, ஆனால் நமக்கு தான் என்ன என்று தெரியவில்லை என்று எனது ஆறாம் அறிவு கூறியது. உடனே, வந்த வழியே திபுதிபு என்று ஒற்றையடி பாதையில் வீட்டுக்கு இருட்டில் ஓட ஆரம்பித்தேன். வீட்டுக்கு போய் சேர்ந்த போது தான் நிம்மதியாக இருந்தது. நான் ஒரு 9 மாடி கட்டிடத்தில் இருந்தேன். நேராக மொட்டை மாடிக்கு சென்றேன். அங்கிருந்து சுற்றி பார்த்தால் பேரதிர்ச்சி. எங்கு பார்த்தாலும் திடீர் திடீரென்று தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஏன் இப்படி நடக்கிறது, என்ன ஆயிற்று என்று ஒன்றுமே தெரியவில்லை.



வீட்டுக்குள் ஓடி வந்து தொலைக்காட்சியை பார்த்தேன். அப்போது தான் தெரிந்தது அயோத்தியில் மசூதியை இடித்து விட்டதால் கலவரம் வெடித்துள்ளது என்று. சரி, எப்படியும் இன்று இரவு வேலைக்கு செல்ல முடியாது, நாளைக்கு பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து நிறுவனத்துக்கு போன் செய்தேன். ஆனால் போன் ஒன்றுமே வேலை செய்யவில்லை. அந்த காலத்தில் கை பேசி கூட கிடையாது.

மறுநாள் காலை பால் கூட வரவில்லை. ஊரில் இருந்து விடுமுறைக்காக எனது மைத்துனர் வந்திருந்தார். சரி, என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எனது ஸ்கூட்டரை எடுத்து கொண்டு மைத்துனரையும் பின்னால் துணைக்கு உட்கார்த்தி கொண்டு வெளியே சென்றேன். சிறிது தூரம் தான் சென்றிருப்பேன். எங்கிருந்தோ இராணுவ உடையில் ஒருவன் வந்து துப்பாகியை எனது மார்புக்கு நேரே வைத்து எனது வண்டியை நிறுத்தினான். நானும் எனது மைத்துனரும் வெலவெலத்து போய் விட்டோம். "ஏன் வெளியே வந்தாய்? ஊரடங்கு உத்தரவு இருப்பது தெரியாதா" என்று ஹிந்தியில் கத்தினான்.

உண்மையிலேயே எனக்கு அப்போது தான் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று தெரியும். எனது நிறுவன அடையாள அட்டையை காண்பித்து அவனிடம் 'பால் வாங்குவதற்காக வந்தேன். ஊரடங்கு உத்தரவு இருப்பது தெரியாது' என்று மன்னிப்பு கேட்டேன். அதற்கு பிறகு தான் துப்பாக்கியை மார்பிலிருந்து அவன் எடுத்தான். உடனே வீட்டுக்கு செல்லுமாறு கூறினான்.

வீட்டுக்கு வ‌ந்து என‌து ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ரிட‌ம் ந‌ட‌ந்த‌தை கூறினேன். அவ‌ர் ஒரு பெங்காலிக்கார‌ர். 'வ‌ட‌ நாட்டில் இது போன்ற‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள் எல்லாம் ச‌ர்வ‌ சாதார‌ண‌ம், க‌ல‌வ‌ர‌க்கார‌ர்க‌ள் ஏதோ செய்து விட்டு போய் விடுவார்க‌ள், அவ‌தி ப‌டுவ‌து ஏனோ சாதார‌ண‌ ம‌க்க‌ள் தான்' என்று கூறினார். த‌மிழ் நாட்டிலிருந்து வ‌ந்த‌ என‌க்கு இது ஒரு புது அனுப‌வ‌மாக‌ இருந்த‌து.

அத‌ற்கு பிற‌கு வெளியே செல்ல‌வே ப‌ய‌மாக‌ இருந்த‌து. நம்புவதற்கு கடினமாக இருக்கும், ஆனால் ஒரு நாள், இர‌ண்டு நாட்க‌ள் இல்லை, ஒரு மாத‌ம், இர‌ண்டு மாத‌ங்க‌ள் இல்லை, கிட்ட‌த்த‌ட்ட‌ 10 மாத‌ங்க‌ள் சூர‌த் ந‌க‌ரிலே எப்பொழுது பார்த்தாலும் ப‌த‌ட்ட‌மாக‌ தான் இருந்த‌து.

எங்கு பார்த்தாலும் இரும்பு தொப்பி அணிந்த இராணுவத்தினர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பார்கள். ஒரு நாள் ஸ்கூட்டரில் நான் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் என்னை வழி மறித்தது. அவர்கள் கையில் உருட்டு கட்டைகள் இருந்தன. என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் "வந்தே மாதரம்" என்று ஹிந்தியில் எழுதிய ஒரு ஸ்டிக்கரை எனது ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் (எனது அனுமதி இன்றி) ஒட்டினார்கள். சிறிது தூரம் சென்றிருப்பேன். தூரத்தில் மற்றொறு கும்பல் காத்து கொண்டிருந்தது. என்ன நடக்கும் என்று நான் யூகித்து விட்டேன். அவசரம் அவசரமாக ஸ்டிக்கரை பிய்த்து எரிந்து எதுவும் நடக்காதது போல சென்றேன்.

நாட்கள் செல்ல செல்ல ஒருவிதமான வெறுப்பே கொள்ள ஆரம்பித்து விட்டேன். பிழைப்புக்காக தமிழ் நாட்டை விட்டு குஜராத் வரை ஏன் வந்தோம் என்று இருந்தது. கடவுளே, எப்பொழுது தான் இது தீரும்?

இதாவது பரவாயில்லை. சகஜமாக பேசிக்கொண்டிருந்த வேற்று மதத்தினர் கூட திடீரென்று வித்யாசமாக பழக தொடங்கினார்கள். திடீரென்று தங்களுடைய மதத்தினர் அதிகம் வாழும் பகுதிக்கு வீட்டை காலி செய்து கொண்டு சென்றனர். அது தான் எனது மனதை மிகவும் வருத்தப்பட செய்தது.

படித்த மக்கள் கூட 'இவன் நமது ஆள் இல்லை, அதனால் இவனுடைய மதத்தினர் அனைவரும் காட்டு மிராண்டிகள், நமது மதத்தினர் அனைவரையும் கொன்று குவித்து விடுவார்கள்' என்று நினக்க வைப்பது என்ன‌? மனிதனுக்கு மனிதன் கொடுக்கும் சாதாரண மரியாதை கூட இப்படி தவிடு பொடியாவதற்கு என்ன காரணம்? எங்கே போயிற்று மனித நேயம்? நேற்று வரை நல்ல நண்பர்களாக, சகோதரர்களை விட நெருக்கமாக இருந்தவர்கள் திடீரென்று எதிரிகள் ஆனதற்கு என்ன காரணம்?எல்லாவற்றுக்கும் காரணம் இந்த பாழாய்ப்போன மதம் தானோ?

ஒரு சிங்கம் மற்றொறு சிங்கத்தை அடித்து சாப்பிடுவதில்லை, ஒரு புலி மற்றொறு புலியை தாக்குவதில்லை, இந்த மனிதன் மட்டும் ஏன் மற்றொறு மனிதனை காரணமே இல்லாமல் தாக்குகிறான்? 'எவனோ எங்கேயோ என்னவோ செய்து விட்டு போகிறான், நாம் ஒற்றுமையாக இருப்போம்' என்று ஏன் யாரும் நினைப்பதில்லை?

ப‌த‌ட்ட‌ம் இனி த‌ணிய‌வே த‌ணியாதா என்று ஏங்கி கொண்டிருந்த‌ போது செப்ட‌ம்ப‌ர் 1993ல் ஒரு நாள் திடீரென்று ம‌ஹாராஷ்ட்ராவில் லாட்டூர் என்ற‌ இட‌த்தில் ப‌ய‌ங்க‌ர‌ பூக‌ம்ப‌ம் வெடித்த‌து. அத‌ன் அதிர்ச்சி சூர‌த் வ‌ரை தெரிந்த‌து. அதிகாலை ந‌ட‌ந்த‌ அந்த‌ பூக‌ம்ப‌த்தினால் வீடுக‌ள் திடீரென்று ஆட‌ ஆர‌ம்பித்த‌ன‌. அனைவ‌ரும் அல‌றி அடித்து கொண்டு வெளியே ஓடி வ‌ந்த‌ன‌ர். ம‌ண் வீடுக‌ள் எல்லாம் பொடி பொடியாக‌ உதிர்ந்த‌ன‌. தொலைக்காட்சியில் வெளிவ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ள் ம‌ன‌தை உருக்குவ‌தாக‌ இருந்த‌ன‌. ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் லாட்டூரில் இற‌ந்த‌ செய்தி சூர‌த் ந‌க‌ர‌ம் முழுவ‌தும் ப‌ர‌விய‌து.

உட‌னே ஒவ்வொறு ஏரியாவிலும் இருந்த‌ இளைஞ‌ர்க‌ள் ஒன்று கூடி ர‌த்த‌ தான‌ம் செய்து அந்த‌ பாட்டில்க‌ளை லாட்டூருக்கு வ‌ண்டியில் எடுத்து சென்ற‌ன‌ர்.

வீட்டில் இருந்த‌ ப‌ழைய‌ துணிம‌ணிக‌ள், எல்லாவ‌ற்றையும் தெரு தெருவாக‌ சேக‌ரித்து கொண்டு சென்ற‌ன‌ர். இத‌ற்கு பிற‌கு ஆச்ச‌ரிய‌ப்ப‌டும் வித‌மாக‌ சூரத் நகரில் ப‌த‌ற்ற‌ம் முழுவ‌துமாக‌ த‌ணிந்த‌து. ந‌க‌ர‌த்தில் உள்ள‌ வியாபாரிக‌ள், பொது ம‌க்க‌ள், பெரிய‌வ‌ர்க‌ள் எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையாக‌ இருப்ப‌தென்று முடிவு செய்த‌ன‌ர். இத‌ற்கு பிற‌கு (சூர‌த் ந‌க‌ரை பொருத்த‌ வ‌ரை) எங்கு க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்தாலும் சூர‌த் ந‌க‌ர‌ம் ம‌ட்டும் அதிலிருந்து பிழைத்து வ‌ழ‌க்க‌ம் போல‌ வாழ்க்கை ந‌ட‌ந்த‌து என்றே கூற‌லாம்.

மிருக‌ ம‌ன‌தை ம‌னித‌ ம‌ன‌மாக‌ ஆக்குவ‌த‌ற்கு இது போன்ற‌ இய‌ற்கை சீற்ற‌ங்க‌ளை கொடுத்து, 'நான் ஒருவ‌ன் உன‌க்கு மேலே இருக்கிறேன் மூட‌ ம‌னித‌னே' என்று இறைவ‌ன் சொல்லாம‌ல் சொல்கிறானோ?